search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முரன் அசுரனும் ஏகாதசியும்
    X

    முரன் அசுரனும் ஏகாதசியும்

    • பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.
    • தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு “ஏகாதசி” என்று பெயரிட்டார்.

    "முரன்" என்றொரு அசுரன் இருந்தான்.

    தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

    அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான்.

    முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார்.

    அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.

    அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார்.

    தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.

    பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.

    பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.

    அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான்.

    அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.

    முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள்.

    பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

    தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு "ஏகாதசி" என்று பெயரிட்டார்.

    மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு "உற்பத்தி ஏகாதசி" என்று அருளினார்.

    Next Story
    ×