search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவநதி கன்னிகளை காத்தருளும் அகோர வீரபத்திர சுவாமி
    X

    நவநதி கன்னிகளை காத்தருளும் அகோர வீரபத்திர சுவாமி

    • மாசி மகத்தன்று கும்பேஸ்வரர், மகாமக குளக்கரைக்கு வரும்போது, வீரபத்திரர் கோவில் முன்பே எழுந்தருளுவார்.
    • அப்போது வீரபத்திரர் கோவில் அர்ச்சகர், கும்பேஸ்வரருக்கு பூஜை செய்வார். இப்பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம்.

    சிவபெருமானின் வடிவங்களில் மிகவும் முக்கியமானது வீரபத்திர வடிவம்.

    தட்சனின்யாக குண்டத்தில் விழுந்து இறந்த அன்னையின் முடிவுக்கு தட்சனைத் தண்டிக்க எண்ணிய ஈசன் தன்னில் இருந்து உருவாக்கிய வடிவே வீரபத்திர வடிவமாகும்.

    அவ்வடிவத்தில் எழுந்து இத்தலத்தில் அருள்பாலிக்கும் வீரபத்ர சுவாமி கோரைப்பற்களுடன் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் ஏந்திய வடிவில் உள்ளார்.

    அருகில் தட்சன் வணங்கியபடி இருக்கிறான். அம்பாள் பத்திரகாளி வடிவத்துடன் தனிச்சன்னதியில் குடி கொண்டு இருக்கிறாள்.

    இத்தல வீரபத்திரருக்கு "கங்கை வீரன்", "கங்கை வீரேஸ்வரர்" என்ற பெயர்களும் உண்டு.

    நவநதிகளில் பிரதானமானது கங்கை. கங்கையின் தலைமையில், இங்கு வந்து பாவம் போக்கிக்கொண்ட நதிகளுக்கு, காவலராக இருந்தவர் என்பதால் வீரப்பத்திரருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

    தஞ்சையை ஆண்ட மாமன்னன் இரண்டாம் இராஜராஜசோழனின் அரசவையில் கவிச்சக்கரவர்த்தியாக இருந்தவர் ஒட்டக்கூத்தர்.

    வீரபத்திரரின் பக்தரான இவர், கும்பகோணத்திலுள்ள ஒரு மடத்தில் சிலகாலம் தங்கி சேவை செய்து வந்தார்.

    வீரபத்திரரைக் குறித்து, "தக்கயாகப்பரணி" என்னும் நூலையும் இயற்றினார். இந்நூலை வீரபத்திரர் சன்னதி முன்பு அரங்கேற்றம் செய்தார்.

    ஒருவர் பெற்ற வெற்றியைக் குறித்து இயற்றப்படும் நூல் "பரணி" எனப்படும்.

    தட்சனின் யாகம் அழித்து வீரபத்திரர் வெற்றி பெற்றதால் இந்நூல், "தக்கயாகப்பரணி" என அழைக்கப்பட்டது.

    ஒட்டக்கூத்தர், சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார். ஆவணி உத்ராடத்தில் இவருக்கு குருபூஜை நடத்தப்படுகிறது.

    மாசி மகத்தன்று கும்பேஸ்வரர், மகாமக குளக்கரைக்கு வரும்போது, வீரபத்திரர் கோவில் முன்பே எழுந்தருளுவார்.

    அப்போது வீரபத்திரர் கோவில் அர்ச்சகர், கும்பேஸ்வரருக்கு பூஜை செய்வார். இப்பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம்.

    பங்குனி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜைகளும், சிவராத்திரியில் ஐந்து கால பூஜையும் இக்கோவிலில் நடைபெறும்

    மகாமகத்தன்று மகாமக தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ள கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவநதிகளும் இத்தலத்திற்கு வந்தன.

    அவர்களுக்கு காவலராக, வீரபத்திரரை அனுப்பி வைத்தார் ஈஸ்வரன்.

    அவரே குளக்கரையில் மேற்கு நோக்கி அமைந்த இக்கோவிலின் அருகில் அமைந்த மற்றொரு சிவ ஸ்தலமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் காசி விஸ்வநாதராக நவகன்னிகளுடன் பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலிக்கிறார்.

    சிறப்பு பிரார்த்தனையாக பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரபத்திரர் சன்னதியில் அரிசி மாவு விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.

    வீரபத்திரரிடம் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கின்றார்கள்.

    Next Story
    ×