search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பித்ருக்களின்  ஆசீர்வாதம் கிடைக்கும்
    X

    பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்

    • மனநலம் குன்றிய குழந்தைகள் விரைவில் குணம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • இந்த தலத்து திருமாலின் திருநாமம் & ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.

    காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் மதுராந்தகத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருமலை வையாவூர்.

    சுமார் 450 படிகளைக் கடந்து சென்றால்... மலையில் கோவில் கொண்டிருக்கும் மலையப்பனை, ஸ்ரீபிரசன்ன வேங்கடேசனைக் கண்ணாரத் தரிசிக்கலாம்.

    இந்த தலத்து திருமாலின் திருநாமம் & ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.

    ஆதி வராக சேஷத்திரம் என திருப்பதி தலத்தைப் போலவே இந்த தலத்தையும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    முதலில் ஸ்ரீஆதி வராகரின் அற்புத தரிசனம். இவரை தரிசித்து விட்டுத்தான் மூலவரை தரிசிக்க வேண்டும் என்பார்கள்.

    மூலவராக... ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள், நின்ற திருக்கோலம், தோளில் சாளக்கிராம மாலையும் அஷ்டலட்சுமி ஆரமும் ஸ்ரீலட்சுமி ஆரமும் என தகதகக்கிற திருமாலின் திருமேனியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    குறிப்பாக, தசாவதார திருக்கோலங்கள் கொண்ட ஆபரணத்தை மாலையாகவும் ஒட்டியாணமாகவும் அணிந்தபடி காட்சி தரும் அழகே அழகு! இன்னொரு விஷயம்... கையில் செங்கோலுடன் தரிசனம் தருகிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.

    விஜயநகரத்தை ஆட்சி செய்த ராஜா தோடர்மால், திருப்பதி திருத்தலத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஒருநாள் மன்னனுக்குக் காட்சி தந்த திருமால், 'பர்வதத்தின் உச்சியில் இங்கே கோவில் அமைந்திருப்பது போல, பர்வதத்தின் மற்றொரு பாகத்திலும் எனக்கு கோவில் எழுப்புவாயாக! அங்கே இருந்தபடியும் பூலோகத்தை காக்கத் திருவுளம் கொண்டுள்ளேன்' என அருளினார்.

    இதில் நெக்குருகிப் போன மன்னன், வையாவூரில் உள்ள மலையில் கோவில் கட்டினான். அதுவே திருமலை வையாவூர் என்றானதாக தெரிவிக்கிறது தல வரலாறு.

    ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளை வணங்கினால், சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இங்கே... ஸ்ரீசுதர்சனர் தனி விமானத்துடன் கோவில் கொண்டிருக்கிறார்.

    இவரை வணங்கி தொழுதால், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்!

    சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை மற்றும் மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசிப்பது சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும். புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கே நடைபெறும் திருப்பாவாடை சேர்த்தி உற்சவம் வெகு பிரசித்தம். இதில் கலந்து கொண்டு திருமாலைத் தரிசித்தால், பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

    குறிப்பாக, மனநலம் குன்றிய குழந்தைகள் விரைவில் குணம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இங்கே உள்ள தீப ஸ்தம்பத்தில், புரட்டாசி பிரம்மோற்சவம் தொடங்கியதும் தீபம் ஏற்றி வழிபடுவர்.

    திருப்பதி போலவே ஐந்தாம் நாள், கருடசேவையில் அமர்க்களமாக காட்சி தருவார் திருமால்! புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் முத்தங்கி சேவையில் காட்சி தரும் திருமாலைத் தரிசிக்க காண கண் கோடி வேண்டும்.

    Next Story
    ×