search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சங்கு தீர்த்த சிறப்பு
    X

    சங்கு தீர்த்த சிறப்பு

    • இத்தீர்த்தத்தில் மூழ்கி விரதம் இயற்றி பேறு பல பெற்றவர்கள் பலராவர்.
    • இச்சங்குதீர்த்தம், மூழ்குவோரின் உளப்பிணியையும் உடற்பிணியையும் போக்கி வருகிறது.

    சங்கு தீர்த்தம் ஆழ்ந்து அகன்றதாகவும் மழை வளம் குறைந்த காலத்தும் வற்றாத நீரூற்றை உடையதாகவும் உள்ளது.

    வருவாய் வழிகள் அடைபட்ட இக்காலத்தும் வடபால் எப்போதும் தெளிந்த நீரையுடையது.

    முற்காலத்தில் சம்புலிங்கம் என்கிற பெயரையுடைய பிரம்மச்சாரி பிராமணன் ஒருவன், ஒரு குருவை அடைந்து யோக நூல்கள் பயின்று வந்தான்.

    அந்தக் குருவானவர் காலா காலங்களில் செய்ய வேண்டிய நித்திய நியமங்களைச் செய்யாதவராய், எப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்தார்.

    இதனைக்கண்ட சம்புலிங்கம் அவர் செயல்கள் தனக்கு வருத்தம் தந்ததால்,

    அக்குருவை அணுகி அவர் தவறுகளைக் கூறி, அவரிடமிருந்து விலகிச் செல்வதாகக் கூறினான்.

    குருவானவர் சம்புலிங்கத்தை குருவைக் கண்டித்த நீ சித்தப்பிரமை கொண்டு அலையக் கடவாயாக என்று சாபமிட்டார்.

    அதனால், சம்புலிங்கம் சித்தப்பிரமை அடைந்து பல இடங்களில் அலைந்து இவ்வேதகிரியை அடைந்தான்.

    சங்குதீர்த்தத்தில் அதன் மகிமை அறியாமலேயே மூழ்கினான்.

    அவன் சித்தப்பிரமை நீங்கி தெளிவு பெற்றான்.

    அவன் நாள்தோறும் சங்கு தீர்த்தத்தில் மூழ்கி மலை வலம் வந்து, இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான்.

    ஒரு நாள் அவன் சங்கு தீர்த்தத்தில் மூழ்கி படியில் அமர்ந்து இறைவனைத் துதித்துக் கொண்டிருக்கையில்,

    அத்தடாகத்தின் மீது பெரிய பறவையொன்று ஒரு கெண்டை மீனைத் தன் வாயில் வைத்த வண்ணம் பறந்து வந்தது.

    அப்பறவை வாயில் இருந்த மீன் பறவையின் வாயிலிருந்து நழுவி தடாகத்தில் விழுந்துவிட்டது.

    தடாகத்தில் விழுந்த மீன் ஒரு யட்சனாக (கந்தருவனாக) உருமாறி வெளிவந்தான்.

    விண்ணில் கந்தருவர்கள் புட்பக விமானத்துடன் நின்றிருந்தனர்.

    இந்த அதிசயத்தைக் கண்ட சம்புலிங்கம் அந்த யட்சனை அணுகி அவன் வரலாறு பற்றி வினவினான்

    யட்சன், "நான் கயிலையில் உள்ள பெரிய தடாகத்தில் காமகளியாட்டத்தில் இருந்தேன்.

    அங்கு வந்த நந்திதேவரை நான், மதிக்காமல் என் விளையாட்டிலேயே இருந்துவிட்டேன், நந்திதேவர் கோபித்து என்னைப் பார்த்து நீ தம்மை மதியாது நீரில் காம மயக்கத்தில் இருந்ததால் மீன் உருவமாகி நீரில் கிடப்பாயாக என்று சாபமிட்டார்.

    நான் பயந்து அவரை வணங்கி சாப விமோசனம் கேட்டேன்.

    நந்தி தேவர் ஆயிரம் ஆண்டுகள் நீ மீனாக இத்தடாகத்தில் வசித்த பிறகு ஒரு பறவை உன்னைக் கவ்விக் செல்லும்.

    அப்பறவை தேகிரியில் உள்ள தடாகத்தின் மீது செல்லும் போது நீ அதன் வாயினின்றும் நழுவித் தடாகத்தில் விழுவாய்.

    அப்போது உன் சாபம் தீர்ந்து நீ யட்ச உருவடைவாய்.

    உன்னை கந்தருவர்கள் அழைத்துச் செல்வார்கள்" என்று அருள் செய்தார் என்று கூறி, கந்தவருடன் புட்பக விமானம் ஏறி வானுலகம் சென்றான்.

    சம்புலிங்கம் அத்தடாகத்தின் மகிமையை உணர்ந்து நாள் தோறும் அதில் மூழ்கி, மலை வலம் வந்து தவமியற்றி முத்தி அடைந்தான்.

    சங்கு தீர்த்தத்தில் மூழ்குவோர் சித்தப் பிரமை நீங்கி தெளிவடைதல் யாவரும் அறிந்த உண்மை.

    இத்தீர்த்தத்தில் மூழ்கி விரதம் இயற்றி பேறு பல பெற்றவர்கள் பலராவர்.

    சிவபெருமான் இத்தலத்தில் தீர்த்தம் வேறு, சிவம் வேறு என்று இரண்டில்லை., இவை (இரண்டும்) ஒன்றே என்கிறார்.

    சங்குதீர்த்தத்தில் பிறக்கும் சங்குகளால் கார்த்திகைத் திங்களில் கடைசி திங்கட்கிழமையில் வேதகிரிப்பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

    வடநாட்டு யாத்திரீகர்கள் இத்தலத்தில் உள்ள இத்தீர்த்தத்தில் நீராடுவதற்காகவே வருகிறார்கள்.

    அவர்கள் இத்தலத்தை தீர்த்ததலம், பட்சிதீர்த்தம் என்று குறிப்பிடுகின்றனர்.

    வடநாட்டு யாத்திரீகர்கள் கங்கை, பட்சிதீர்த்தம், இராமேசுவரம் சேது இந்த மூன்றில்தான் நீராடுவர்.

    அவர்கள் நீராடும், மூழ்கும் இடங்களில் ஒன்று நதி, ஒன்று குளம், ஒன்று கடல்.

    பாரத நாட்டிலுள்ள குளங்களில் இது ஒன்று தான் தீர்த்தம் என்று அவர்கள் மூழ்குகிறார்கள்.

    இன்றும் நாள்தோறும் சில நூறு யாத்திரீகர்கள் இத்தலத்திற்கு வந்து, சங்கு தீர்த்தத்தில் நீராடி மலை ஏறி வேதகிரி ஈசனையும், கழுகுகளையும் தரிசித்துச் செல்கின்றனர்.

    இச்சங்குதீர்த்தம், மூழ்குவோரின் உளப்பிணியையும் உடற்பிணியையும் போக்கி வருகிறது.

    Next Story
    ×