search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம கோவில்
    X

    சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம கோவில்

    • சோழர் காலமான கி.பி.1051ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது
    • மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    திருத்தலம் புதுச்சேரி & விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.

    புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன.

    அபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது.

    இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

    கல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

    மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர்.

    லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவிலில் உள்ளன.

    முதன்மைக் கடவுளான திருவந்திபுரம் தேவநாதன்தான் இங்கு நரசிம்மராக சேவை சாதிக்கிறார் என்பர்.

    ஆனால் திருமங்கையாழ்வார் நரசிம்ம சாமிதான் திருவந்திபுரத்தில் தேவநாத சாமியாக உள்ளார் என்று பாடியிருக்கிறார்.

    ஸ்ரீஅஹோபில மடத்தில் 4வது தலைமை பீடாதிபதியின் பிருந்தாவனமும் இங்குள்ளது.

    ஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார்.

    இங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார்.

    பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார்.

    மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

    வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    யார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன.

    மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது.

    இங்கே ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், பிரம்மோற்சவம் (10நாட்கள்) கொண்டாடப்படுகின்றன.

    பெருமாள் உற்சவமூர்த்தி பாண்டிச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பாடு எழுந்தருளி தீர்த்தவாரி (மாசி மகத்தில்) உற்சவம் கண்டருள்கிறார்.

    Next Story
    ×