search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    விஷேச பலன்களை அருளும் ஆடிப்பெருக்கு பூஜை
    X

    விஷேச பலன்களை அருளும் ஆடிப்பெருக்கு பூஜை

    • நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர்.
    • கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது.

    உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல், கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். அன்று புனித நதிகளுக்கு சீர் செய்து வணங்குவது சிறப்பு.

    நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர்.

    கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும்.

    நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.

    ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    செம்பிலுள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.

    Next Story
    ×