ஆன்மிக களஞ்சியம்

தனித்தனி சன்னதி

Published On 2023-08-13 06:41 GMT   |   Update On 2023-08-13 06:41 GMT
  • இருக்கன் குடியே விழாக்கோலம் பூண்டு திரும்பிய திசை எல்லாம் பக்தர்களாக காணப்படுவார்கள்.
  • தன்னை அண்டிய அத்தனை பேருக்கும் வாக்கு சொல்லி வரம் அளிப்பாள்.

இருக்கன்குடி கோவிலில் விநாயகர் அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார். அருகே வாழவந்தானும், அதற்கு மேற்கே ராக்காச்சி அம்மனும் உள்ளனர். வடமேற்கு பகுதியில் பேச்சியம்மனும், முப்புடாதி அம்மனும் தனிதனி சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

கிழக்கு பகுதியில் காத்தவராயன் கோவில் அமைந்துள்ளது. பைரவமூர்த்தி சன்னதியும் உள்ளது. கருப்பசாமி கோவில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த தெய்வங்களை வணங்கிவிட்டு அருகில் உள்ள கயிறு கட்டி மாரியம்மனையும் வழிபட்டு செல்வார்கள்.

பக்தர்கள் குவியும் திருவிழாக்கள்

கேட்டவர்களுக்கு கேட்ட வரங்கள் அளித்துவரும் மாரியம்மன் பக்தர்களின் நோய்களையும் தீர்த்து வருகிறாள். இதனால் கோவிலுக்கு நாளுக்குள் நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இத்திருத்தலத்தில் செய்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இடுக்கண்களையும் இருக்கன் குடியாளுக்கு ஆடி வெள்ளி அன்று நடைபெறும் பெருந்திருவிழா சிறப்புடையதாகும். அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொடி ஏற்றம் நடை பெறும்.

ஆடிகடைசி வெள்ளி அன்று உற்சவர் கோவிலில் இருந்து அன்னையின் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளி அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோவிலில் எழுந்தருள்வாள். இந்த திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் இருக்கன்குடியில் கூடுவார்கள்.

இருக்கன் குடியே விழாக்கோலம் பூண்டு திரும்பிய திசை எல்லாம் பக்தர்களாக காணப்படுவார்கள். அன்று விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் வேன், கார்களில் பக்தர்கள் அலை அலையாக வந்து கலந்து கொள்வார்கள். தை கடைசி வெள்ளி கிழமையிலும் விழா நடை நடைபெறும்.

அன்றும் பெருந்திரளான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். அன்று பக்தர்கள் அம்மனுக்கு அக்கினி சட்டி எடுத்தும், ஆயிரங்கண்பானை எடுத்தும்,மொட்டை போட்டும். மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

தன்னை ஏற்று சாமியாடும் பக்தர்களைக் கூட தெய்வமாக்கிவிடும் கருணை உள்ளம் கொண்டவள் மாரி. அந்த மாரியர்களில் மகாசக்தி வாய்ந்தவள் இந்த இருக்கன்குடி மாரியம்மன். ஆடியில் இந்த அம்மனை தரிசித்து அருள் பெற்று வாருங்கள்.

இருக்கன்குடி அமர்ந்தவளே; எக்குடிக்கும் தாயாரே!

வார்ப்புச் சிலையாளே; வச்சிரமணித் தேராளே!

வருத்த வகையறியேன்; வர்ணிக்கப் பேரறியேன்!

பேரு மரியேனம்மா, பெற்றவளே யென்தாயே!

இருக்கன்குடியை விட்டு என் தாயே வாருமம்மா!

ஆடி மாதம் பிறந்துவிட்டதால் இருக்கன்குடி மாரியாயி கோவில் முழுக்க கொண்டாட்டம்தான். தெற்கே இருக்கிற கிராமியப் பாடகர்கள் எல்லாரும் கூடி இருக்கன்குடி மாரியைப் பாடல்களால் வர்ணித்து அழைப்பது வழக்கம். ஆத்தா இருக்கன்குடி மாரியும் அவர்களின் பாடலுக்கு மனமிரங்கி வந்து அருள் மழை பொழிவாள்.

தன்னை அண்டிய அத்தனை பேருக்கும் வாக்கு சொல்லி வரம் அளிப்பாள். இவளை வணங்கியவர்கள் வெறுங்கையோடு போனதே இல்லை என்கிறார்கள் இந்த ஊர்க்கார்கள். உண்மைதான், மாரியின் பாடல்களாலும் வேப்பிலை, எலுமிச்சை வாசத்தாலும் கிரங்கித்தான் கிடக்கிறது இருக்கன்குடி.

பூஜை கால நேரங்கள்

தினந்தோறும் இத்திருக்கோவிலில் ஆறுகால பூஜைகள் கீழ்கண்ட விபரப்படி நிகழ்கின்றன.

காலை நடை திறப்பு-5 மணி

1. உதய பூஜை-7 மணி (காலை)

2. கால சந்தி பூஜை-9 மணி (காலை)

3. திருக்கால சந்தி பூஜை-11 மணி (காலை)

4. உச்சிக்கால பூஜை-1 மணி (பிற்பகல்)

5. சாயரட்சை பூஜை-6 மணி (மாலை)

6. அர்த்த பூஜை-8 மணி (இரவு)

பிரதி செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக காலை முதல் இரவு பூஜை முடியும் வரை சன்னதி திறந்து வைக்கப்பட்டு இருக்கும். மற்ற தினங்களில் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை சன்னதி பூட்டப்பட்டிருக்கும். தினமும் 2 நேரம் அபிஷேகம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News