சினிமா செய்திகள்

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது- அஜித்

Published On 2025-04-29 07:43 IST   |   Update On 2025-04-29 07:43:00 IST
  • பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன்.
  • இந்த சூழலில் சாதி, மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.

மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் குடியரசு தலைவரிடம் இருந்து பத்ம பூஷன் விருதை பெற்ற நடிகர் அஜித்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன். இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என்று நம்புகிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த சூழலில் சாதி, மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நாம் வாழ வேண்டும் என்று கூறினார். 

Tags:    

Similar News