இந்த இந்தி நடிகரின் ஏக்கத்தை தமிழ் இயக்குனர்கள் தீர்ப்பார்களா?
- தமிழில் பல திறமையான இயக்குனர்கள் உள்ளனர் என்றார் அனில் கபூர்
- இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் தயங்கியதில்லை என்றார் அனில் கபூர்
80களிலும், 90களிலும் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர், அனில் கபூர் (67).
சில தினங்களுக்கு முன் அனில் கபூர் சென்னை வந்திருந்த போது அவரிடம் அவரது திரைப்பயணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு அவர் பதிலளித்ததாவது:
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நான் நடித்திருந்தாலும் தமிழ் படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம்தான்.
தமிழில் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள்; ஆனால், எனக்கு இதுவரை எவரும் வாய்ப்பு அளிக்கவில்லை.
இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் என்றுமே தயங்கியதில்லை. தமிழில் வெற்றி பெற்ற "முதல்வன்" மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற "ஸ்வாதி முத்யம்" ஆகிய படங்கள் இந்தியில் உருவான போது அந்த இயக்குனர்களை நானாக தேடிச் சென்றுதான் வாய்ப்பு கோரினேன். அவை இன்றும் பேசப்படுகின்ற திரைப்படங்கள்.
கே. பாக்யராஜ் அவர்களின் பல வெற்றி படங்களின் இந்தி உருவாக்கத்தில் நான் பங்கேற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
கலைத்துறையின் சிறப்பே கலை படைப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் உருவாவதுதான்.
நல்ல எதிர்காலத்திற்காக, நிகழ்காலத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அனில் கபூர் கூறினார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் கன்னட மொழியில் உருவாக்கிய "பல்லவி அனுபல்லவி" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அனில் கபூர். அதில் தோன்றும் பல காட்சிகளை மீண்டும் மணிரத்னம் "மவுன ராகம்" திரைப்படத்தில் கார்த்திக்-ரேவதி பங்கேற்கும் காட்சிகளில் கையாண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
90களின் இறுதி வரையில் இந்தி திரையுலகில் மிகக் குறைவான நடிகர்கள்தான் திரையில் மீசை வைத்து கொண்டு நடித்தனர். ஆங்கில பட கதாநாயகர்கள் போல் மீசை மற்றும் தாடி இல்லாமல் நடிப்பதுதான் அங்கு வழக்கமாக இருந்தது.
சத்ருகன் சின்கா, நானா படேகர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்தனர்.
அவர்களை போன்றே அனில் கபூரும், மீசையுடனே தனது படங்களில் நடித்தார்.
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து நடிப்பதில் அனில் கபூர் கவனம் செலுத்துபவர்.
எடுத்துகாட்டாக, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று தந்த "ஸ்லம்டாக் மில்லியனர்", 2011ல் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ, டாம் க்ரூயிஸ் (Tom Cruise) கதாநாயகனாக நடித்த "மிஷன் இம்பாசிபிள் – கோஸ்ட் ப்ரோடோகால்", 2023ல் வெளிவந்த "அனிமல்" உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற முக்கிய கதாபாத்திரங்கள் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று தந்தது.
எப்போதும் இளமை குன்றாத தோற்றத்துடன் இருக்கும் அனில் கபூர், 2019ல் ஒரு பேட்டியில் தனது இளமைக்கு காரணம் தான் விரும்பி உண்ணும் தென்னிந்திய இட்லி, சாம்பார், சட்னி, அரிசி, ரசம் ஆகியவை என கூறியிருந்தார்.