கிரிக்கெட் (Cricket)
null

டி20-யில் விராட் கோலிக்கும்...ஒருநாள் போட்டியில் தவான் இடத்திற்கு ஆபத்து- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விளக்கம்

Published On 2022-12-29 10:15 GMT   |   Update On 2022-12-29 10:16 GMT
  • சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.
  • நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு.

மும்பை:

இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிசிசிஐ அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் தூக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 அணியில் விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் இலங்கைத் தொடரில் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ், முகமது சிராஜ் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளதாவது:-

ஷிகர் தவான் குறித்து நிச்சயமாக கவலைப்படுகிறேன். அவருக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. முதலில் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். அதை எல்லாம் தாண்டி ஒரு நாள் போட்டியில் தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் தவான் நன்றாக விளையாடி வந்தார். ஆனால் இப்போதெல்லாம் சில போட்டிகளில் ரன் சேர்க்கவில்லை என்றால் உங்களுடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிடும். காரணம் பல இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஷிகர் தவானுக்கு மாற்றாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். சுப்மான் கில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார்.

இதனால் ஷிகர் தவானுக்கு சிக்கல் அதிகரித்து விட்டது. இதேபோன்று இஷான் கிஷனும் தொடக்க வீரருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்காக தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் தொடரில் சாதித்ததற்காக கிடைத்த வெகுமானம். கேப்டனாக ஹர்திக் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் அவர் அணியை வழி நடத்திய விதம் பாராட்டத்தக்கது. விராட் கோலியை பொறுத்தவரை டி20 போட்டியில் அவருடைய இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தான் அதிகம் விளையாடுவார்.

இந்திய ஒரு நாள் அணியில் முக்கியமான வீரராக விராட் கோலி திகழ்வதால் அவர் நடப்பாண்டில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் டி20 அணியில் அவர் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் டி20 அணியில் பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதால், விராட் கோலிக்கு நெருக்கடி ஏற்படும்.

எனினும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார். இதனால் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று சொல்ல முடியாது.

Tags:    

Similar News