இன்று 2-வது போட்டி: இந்தியா தொடரை கைப்பற்றுமா?
- முதல் போட்டியில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் இன்று விளையாடமாட்டார்.
- ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.
முதலாவது ஆட்டத்தில் 116 ரன்னில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. பந்து வீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் (5 விக்கெட்), ஆவேஷ் கான் (4 விக்கெட்) மிரட்டினார்கள். பேட்டிங்கில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினர்.
டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஷ்ரேயாஸ் அய்யர் 2-வது, 3-வது ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.
தென்ஆப்பிரிக்க அணியில் பேட்ஸ்மேன்கள் கடந்த ஆட்டத்தில் மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். டோனி டி ஜோர்ஜி, பெலுக்வாயோ, கேப்டன் மார்க்கிராம் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆடுகளத் தன்மையை சரியாக கணிக்க தவறியதே தோல்விக்கு காரணம் என்பதை கேப்டன் மார்க்கிராம் ஒப்புக் கொண்டார். அவர்கள் அந்த தவறை திருத்திக் கொண்டு வலுவாக திரும்புவார்கள்.
கடந்த முறை (2022) தென்ஆப்பிரிக்க தொடரில் லோகேஷ் ராகுல் தலைமையில் முழுமையாக (0-3) தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த முறை அதற்கு பரிகாரம் தேடும் வகையில் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வரிந்து கட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் அதிக ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.