கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். 2024: சூர்யகுமார் யாதவ் அதிரடி - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

Published On 2024-04-11 17:46 GMT   |   Update On 2024-04-11 17:46 GMT
  • ஆகாஷ் தீப் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
  • சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை குவித்தார்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.

போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

197 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும், ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார்.

சூர்யகுமார் யாதவ் 52 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைசாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News