12 மாதங்களாக சொந்த அணிக்கு திரும்புமாறு அழைத்தேன்: அவர் சொன்ன பதில் இதுதான்- ராவ்மன் பவல்
- கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
- அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம்.
கொல்கத்தா:
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார்.
இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார்.
நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் வரும் ஜூன் 1-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் சுனில் நரைன் இடம் பெறுவாரா என ராஜஸ்தான் வீரர் ரோவ்மன் பவலிடம் கேள்வி கேட்க்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
220 ரன்களை சேசிங் செய்தது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது. நான் களமிறங்கிய போது சுனில் நரைனை அட்டாக் செய்யும் திட்டத்துடன் தான் களமிறங்கினேன்.
ஏனென்றால் கொல்கத்தா அணியின் சிறந்த பவுலர் நரைன் தான். அதேபோல் சூழலும் அதற்கேற்றபடி அமைந்தது. அதனால் எனது பலத்தை அறிந்து, ஷாட்களை விளையாடினேன். அது ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
ஆனால் எங்கள் எல்லோரையும் அவர் தவிர்த்துவிட்டு செல்கிறார். அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம். டி20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன் நிச்சயம் மனதை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.
ராஜஸ்தான் அணியின் சிந்தனையும், எண்ணமும் ஒன்றாக உள்ளது. அதேபோல் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கும் சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் பகிரப்படுகிறது. சர்வதேச வீரரான எனக்கு சரியாக தகவல்கள் சொல்லப்படுவதை நிச்சயம் பாராட்ட வேண்டும். எங்கள் வீரர்கள் அனைவரும் நல்ல சூழலில் உள்ளோம்.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்காக நான் 4 அல்லது 5 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி வருகிறேன். அதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்னை மேல் வரிசையிலும் களமிறக்கலாம். அடுத்த சில நாட்கள் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு நாட்களில் சங்கக்காராவின் காதுகளில் இதனை தொடர்ச்சியாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.