டெஸ்டில் எப்படி ஆட வேண்டும்: கில்லுக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்- நாசர் ஹூசைன்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன்.
- இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் 24 வயதான சுப்மன் கில் கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 29 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 1,584 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார்.
எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் சோபிக்கவில்லை. அவர் 2 மற்றும் 26 ரன்னில் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தார். வெள்ளை நிற பந்தில் ஜொலிக்கும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரை 19 டெஸ்டில் ஆடி 2 அரைசதம் உள்பட 994 ரன் எடுத்துள்ளார். கடைசி 7 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்த நிலையில் அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (இந்தியா) டெஸ்டில் எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், 'டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவதை காட்டிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு சிறிது வித்தியாசம் உள்ளது. ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி போன்றே டெஸ்டிலும் அதிரடியாக ஆட நினைக்கிறார்.
குறுகிய வடிவிலான போட்டிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைநிற பந்தை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய சிவப்பு நிற பந்து காற்றிலும், ஆடுகளத்திலும் வேகமாக நகரும். மேலும் சிவப்பு பந்து அதிகமாக பவுன்சும் ஆகும். அதை மனதில் வைத்து அவர் டெஸ்டிஸ் விளையாட வேண்டும்.
சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய போது, அவரது ஷாட்டுகள் எல்லாம் பாராட்டும்படி இருந்தது. மீண்டும் அவர் பார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில், 'சுப்மன் கில் 2023-ம் ஆண்டில் முதல் 9-10 மாதங்களில் நன்றாக ஆடினார். அதன் பிறகு தான் தடுமாறுகிறார். மறுமுனையில் ஆடும் ரோகித் சர்மா போன்ற வீரர்களிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை உடல்நலம் பாதிப்பின் (டெங்கு காய்ச்சல்) காரணமாக இந்த தடுமாற்றம் வந்திருக்கலாம். சுப்மன் கில்லிடம் சூப்பர் திறமை இருக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரராக இருப்பார். 2024-ம் ஆண்டு அவருக்கு நன்றாக அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.