பஞ்ச பாண்டவரில் நால்வரின் உயிரை காவு வாங்கிய நஞ்சுப்பொய்கை
- பாஞ்சாலியுடன் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர்.
- அரணிக்கட்டையை மீட்டுத்தர அந்தணர் பாண்டவர்களின் உதவியை நாடினார்.
பார்ப்போர் கண்களை கவர்ந்திழுக்கும் கொள்ளை அழகு கொண்டது குமரி மண். இங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு என்பது மண் சார்ந்தது மட்டுமல்ல, நமது பாரம்பரியம் சார்ந்தது என்பது அனைவரும் பெருமை கொள்ளும் விஷயம்.
அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையை கொண்ட ஊராக சொத்தவிளை விளங்கி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் அழகை காண விடுமுறை காலங்களில் உள்மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்ல தவறுவதில்லை.
இந்த சிறிய ஊருக்கு மகாபாரதத்துடன் தொடர்பு உள்ளது என்பது ஒரு அரிய தகவல் தான். மகாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனிடம் நாட்டை இழந்தவர்கள் பஞ்ச பாண்டவர்கள். இதனால் 12 ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கையும்) செய்ய வேண்டிய நிலை பாண்டவர்களுக்கு ஏற்பட்டது.
பாஞ்சாலியுடன் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். 12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறவேண்டிய நிலையில் அந்தணர் ஒருவர், பஞ்ச பாண்டவர்களிடம் உதவி கேட்டு வந்தார். அவர் நடத்த இருந்த வேள்விக்கு தீ மூட்ட பயன்படும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக் கொண்டது. அந்த மானை கண்டுபிடித்து அரணிக்கட்டையை மீட்டுத்தர அந்தணர் பாண்டவர்களின் உதவியை நாடினார். அந்த மானைபிடிக்க ஓடினர் பாண்டவர்கள். இதனால் தளர்ந்துபோன அவர்கள் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.
காடு, மேடு பாராமல் ஓடிய அவர்களுக்கு கடும் தாகம் ஏற்பட்டது. எனவே எங்கேயாவது தண்ணீர் இருக்கிறதா? என்று பார்த்து தண்ணீர் கொண்டுவரும்படி நகுலனிடம், தருமர் கூறினார். தண்ணீரை தேடிச்சென்ற நகுலன் வனத்தின் ஒரு பகுதியில் தூய்மையான தண்ணீருடன்கூடிய தடாகத்தை பார்த்தான். உடனே அந்த பொய்கையில் இறங்கி தண்ணீரை பருக நகுலன் முயன்றபோது ஒரு அசரீரி ஒலித்தது. இந்த தடாகம் எனக்கு சொந்தமானது, அதனால் முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன்பிறகு நீ நீர் பருகலாம் என்றது அந்த அசரீரி.
அதை கண்டுகொள்ளாத நகுலன், குளத்துக்குள் இருந்த தண்ணீரை பருகினான். உடனேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான். 2-வதாக சகாதேவன், 3-வதாக அர்ஜூனன், 4-வதாக பீமன் ஆகியோரும் வந்து பொய்கையில் இறங்கி தண்ணீர் குடிக்க முயலும் போதும் நகுலனுக்கு ஒலித்த அசரீரி ஒலித்தது. ஆனால் அவர்கள் யாரும் அசரீரியை பொருட்படுத்தவில்லை. அந்த குரலை மீறி தண்ணீர் பருகியதால் நகுலனுக்கு பிறகு வந்த 3 பேரும் மாண்டனர்.
தண்ணீர் கொண்டுவர சென்ற தம்பிகள் 4 பேரும் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீரைத் தேடி தருமனும் நடக்கலானார். தடாகம் அருகே வந்தவர். தனது நான்கு சகோதரர்களும் மாண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார். இங்கு போர் எதுவும் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே என எண்ணியவர், உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகத்தை தணித்துக் கொள்வோம் என பொய்கையில் இறங்கி தண்ணீர் குடிக்க முயன்றார்.
அப்போதும் அசரீரி ஒலித்தது. என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால்தான் உன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேரும் மாண்டு போனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகள் நிலைதான் உனக்கும் ஏற்படும் என்று குரல் ஒலித்தது.
அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் பருகாமல் கரையேறிய தர்மர், "இந்த பொய்கை உனக்கு சொந்தம் என கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. நீ கேள்விகளைக் கேள் முடிந்த அளவு பதில் கூறுகிறேன் என்றார். உடனே அசரீரி எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற கேள்விக்கு, தர்மர் உடனே சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார். இதுபோன்று அசரீரியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, சளைக்காமல் தர்மர் பதில் சொன்னார்.
தர்மரின் பதில்களால் அசரீரி மகிழ்ந்து தண்ணீர் பருக அனுமதித்தது. இறுதியில் அந்த அசரீரி இறந்த நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன், யாருக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனக்கேட்டது. நகுலனை எனக்கு திருப்பிக் கொடுங்கள் என்று தருமர் வேண்டினார். இதனால் ஆச்சரியமடைந்த அசரீரி யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான அர்ஜுனன், பீமன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்கு தேர்ந்தெடுக்கிறாய் என அசரீரி கேட்டது.
அதற்கு தருமன், எனது தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என 2 மனைவிகள் உண்டு. நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மற்றொரு தாயான மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாயாருக்கு பக்திபூர்வமாக சேவை செய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்து விட்டாள். அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன். போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல என்றான் தருமன்.
இந்த பதிலைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த தர்மதேவன் (எமதர்மன்) அங்கு தோன்றினார். தர்மா நான் உனக்கு தெய்வீகத் தந்தையாவேன்.அந்தணரின் அரணிக்கட்டையை மான் உருவில் எடுத்து வந்தது நான்தான். உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனது 4 சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள் என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார்
தர்மதேவன். அதைத்தொடர்ந்து 4 சகோதரர்களும் தூங்கி எழுவதுபோன்று கண்விழித்தார்கள். அரணிக்கட்டையும் கிடைத்தது. அந்தணருக்கு அந்த அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருட அஞ்ஞாதவாசத்துக்கு தயாரானார்கள்.
மகாபாரத காவியத்தில் நகுலன், சகாதேவன், அர்ஜூனன், பீமன் ஆகிய 4 பேரும் நீர் பருகி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகாவிஷ்ணு கோவிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள். இப்பகுதி மக்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்கையில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள்.
எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்த பொய்கை வறண்டு போகாது. சொத்தவிளை கடற்கரையை ஒட்டி பஞ்ச பாண்டவர்களில் 4 பேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும், மகாவிஷ்ணு கோவிலும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் 4 பேர் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நாளடைவில் அது மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது. இதுதான் சொத்தவிளை ஊரின் வரலாறு.