பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம்
- கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது.
- 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நன்மை வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 2-ந்தேதியும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று முன்தினமும் அன்னாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவில் மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜையில் சிவபெருமான், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது.
பின்னர் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி ஆகியோர் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.