சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் ரூ.300 கட்டணம் செலுத்தி இருமுடி கட்ட ஏற்பாடு
- தினமும் 55 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள்
- சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி 18-ம் படி ஏற வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். இதுவரை 6.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தினமும் 55 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி 18-ம் படி ஏற வேண்டும். இதற்காக பம்பையில் உள்ள கணபதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பம்பை கணபதி கோவிலில் ரூ.300 கட்டணம் செலுத்தி பக்தர்கள் இருமுடி கட்டிக்கொள்ளலாம்.
இதற்கான பொருட்கள், நெய் தேங்காய், 18-ம் படியில் உடைக்க வேண்டிய தேங்காய் உள்பட அனைத்து பொருட்களும் இங்கு வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் இந்த சேவையை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலை பாதையில் செல்லும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ சிறப்பு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் மலைபாதையில் வேகமாக செல்லும் வாகனங்களில் சென்று பக்தர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பார்கள். அந்த வாகனங்களில் ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் இருக்கும். இதனை கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.