வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கானோர் தரிசனம்: கடற்கரையில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர்

Published On 2023-01-01 08:40 GMT   |   Update On 2023-01-01 08:40 GMT
  • ஆங்கில புத்தாண்டையொட்டி நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டிருந்தது. அதன்படி இன்று 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.
  • மார்கழி மாதத்தையொட்டி திரளான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

திருச்செந்தூர்:

புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டிருந்தது. அதன்படி இன்று 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது.

இன்று புத்தாண்டையொட்டி லட்சகணக்கானோர் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே மார்கழி மாதத்தையொட்டி திரளான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டு சென்றனர். இதேபோல் கோவில்பட்டி, சாத்தான்குளம், எட்டயபுரம், தென்திருப்பேரை, ஆறுமுகநேரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

டவுன் நெல்லையப்பர் கோவிலில் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல் சந்திப்பு சாலைக் குமாரசுவாமி கோவில், பாளை சிவன்கோவில், தெற்கு பஜார் மேலவாசல், சுப்பிரமணிய சுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று பொதுமக்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவில் புளியரை தட்சணாமூர்த்தி கோவில், குற்றாலம் குற்றால நாதர் கோவில், ஆய்க்குடி பாலமுருகன் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவில், அழகிய மனவாளர் பெருமாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவில், பாவூர்சத்திரம் நரசிம்மர் கோவில் மற்றும் ஆலங்குளம், வாசுதேவநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Tags:    

Similar News