என் மலர்
தூத்துக்குடி
- சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் பவுர்ணமி நாளான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்கள் மற்றும் பஸ்கள் மூலம் காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி நிலாச்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
பவுர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
- குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான்.
திருச்செந்தூர்:
ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்துக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடும் சாஸ்தா கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பது, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா, அல்லி ஊத்து கல்லால் அய்யனார், கலியுக வரதர் சாஸ்தா, கற்குவேல் அய்யனார், மருதமலை அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், தலையூன்றி சாஸ்தா போன்ற தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவிலில் வழிபாடு செய்தனர்.
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உத்திரத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6மணிக்கு வள்ளியம்மை தபசு காட்சிக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது.
மாலை 3மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் புறப்பாடு, மாலை 6 மணிக்கு தோள் மாலை மாற்றுதல், இரவு 10 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
- துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தெற்கு வங்கக் கடலில் மையப் பகுதியில் குறைந்த அளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தூத்துக்குடி குமரிக் கடல் பகுதி தென் தமிழக கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அவ்வப்போது சுமார் 55 கிலோமீட்டர் வேகத்திலும் 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ரசிகர்கள் அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
- திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இந்த நிலையில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் பார்க்க தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கம் சென்ற அமைச்சர் கீதா ஜீவனுக்கு அஜித் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார்.
இதையடுத்து அஜித் ரசிகர்களுடன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தை அமைச்சர் கீதா ஜீவன் கண்டு ரசித்தார்.
- திருச்செந்தூர் செல்வதாக கூறியிருந்தார்.
- ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.
அவருடன் வேறு யாரும் வரவில்லை. பின்னர் அவர் தனியாக காரில் ஏறி சென்றார். முன்னதாக சென்னையில் தனது பயணம் குறித்து கூறும்போது அவர், திருச்செந்தூர் செல்வதாக கூறியிருந்தார். ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை. அறிவிக்கப்படாத அவரது வருகை அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
எட்டயபுரம்:
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சித்தன் மகன் ராஜ்குமார் (வயது 35). இவர் மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது மனைவி தமிழரசி (26), மகன் அஸ்வரதன் (5) மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒரு காரில் நேற்று இரவு புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். காரை ராஜ்குமார் ஓட்டினார்.
கார் இன்று அதிகாலை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ராஜ்குமாரின் மனைவி தமிழரசி, அவரது மகன் அஸ்வரதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் காரில் சென்ற அண்ணாமலை மனைவி விஜயா (60) செல்வராஜ் மனைவி தாமரைச்செல்வி என்ற சந்தியா (31), மகன் சபரீசன் (12), சித்தன் மகள் சுமதி (46), கோவிந்தராஜ் மகள் ரம்யா (12), காரை ஓட்டி சென்ற ராஜ்குமார் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
- 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் வேலைகளில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று, பகலில் மீண்டும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து, மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கி கனமழையாக மாறியது.
இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.
தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
அத்திமரப்பட்டி, காலங்கரை, கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நெல் அறுவடை பணியும் பாதிப்படைந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கிடங்குகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக திருச்செந்தூர் சாலையில் வடிகால் இல்லாததால் முழு தண்ணீரும் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கீழே இறங்கி வாகனத்தை உருட்டி சென்று அவதி அடைந்தனர்.
இதுபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளான திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் , கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டி னத்தில் 96 மில்லிமீட்டர், தூத்துக்குடி 16.20 மி.மீ, திருச்செந்தூர் 55 மி.மீ, குலசேகரப்பட்டினம் 6 மி.மீ, சாத்தான்குளம் 6.40 மி.மீ, கோவில்பட்டி 18 மி.மீ, கழுகுமலை 80 மி.மீ, கயத்தார் 70 மி.மீ, கடம்பூர் 1.50 மி.மீ, எட்டையாபுரம் 5.10 மி.மீ, விளாத்திகுளம் 17 மி.மீ, காடல்குடி 5 மி.மீ, வைப்பார் 9 மி.மீ, சூரங்குடி 20 மி.மீ, ஓட்டப்பிடாரம் 73.50 மி.மீ, மணியாச்சி 9 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 487.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 25.67 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதியம்புத்தூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
- நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன.
- 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.
பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
- கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி இணையாக சாமி தரிசனம் செய்யயும் வகையில் மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பணிகள் முடிந்து பக்தர்கள் தங்கும் விடுதி, இரண்டாம் கட்டமாக பக்தர்கள் காத்திருக்கும் அறை, அலுவலக கட்டிடம் கலையரங்கம் என முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
அடுத்த கட்டமாக கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் திடீரென மயக்கம் அடைந்தாலோ அல்லது ஏதேனும் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேற அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் தற்போது பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருவதால் நாழிக்கிணறு வாகன நிறுத்தம் தற்காலிகமாக நாளை 31-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக பக்தர்கள் வாகனங்கள் டி.பி. ரோட்டில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியாலும் பக்தர்கள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகிலும், தாலுகா அலுவலகம் அருகிலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் நகர எல்லைக்குள் வாகன நெருக்கடி காணப்பட்டது.
- ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
- இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.
இவர் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா (வயது 50). இவர்கள் குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்றனர்.
சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா மற்றும் கிளாடிஸ் ரேபேக்காவின் தங்கையான சென்னை நியூ பெருங்களத்தூரை சேர்ந்த ஸ்டெபி புஷ்பா செல்வின், அவரது கணவர் சரண், சிறுமி அவினா (5) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேர் ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிஸ் இறங்கினார். அவருடன், அவரது தங்கை மகளான அவினாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கினர்.
உடனே கரையில் இருந்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்து சென்றனர்.
இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார்.
- நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர்.
கோவில்பட்டி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம் அருகே கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி , தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தி வருகின்றார். நிதி மந்திரி, விவசாய துறை மந்திரியை நானும், தமிழக நிதித்துறை அமைச்சரும் நேரில் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினோம். ஓரிரு வாரங்களில் நிதி வரும் என்றார்கள். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்படி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும்போது ரூ.4034 கோடி தர வேண்டிய பணத்தை 5 மாதங்களாக தரவில்லை என்று கேட்டோம். ஆனால் அதற்கும் பதில் இல்லை.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாங்கள் போராடியதைக் கண்டு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டன. இதனால் பாராளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
போராட்டத்தை கை விடுங்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் பலமுறை இதுபோன்று உறுதியளித்து தரவில்லை என்றபோது எப்படி இவர்கள் கூறுவதை நம்ப முடியும்.
எனவே தான் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.பி.க்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி, தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் தவறான, பொய்யான தகவலை கூறுகிறார்.
தி.மு.க., காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சாதாரண மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்தனர். மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று கூறி ரூ.2 ஆயிரம் கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சி தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி.
நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர். கல்வி மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி ஆட்சிக்கு மனம் வரவில்லை. 2024-25 மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதியைத்தான் ஒதுக்கீடு செய்தார்கள்.
ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த போது இதில் ரூ.10 ஆயிரம் கோடி துண்டு விழுவது குறித்து கேள்வி எழுப்பினோம். தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்வோம் என்று ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இந்த நிலையில் தான் பா.ஜ.க. அரசின் பட்ஜெட் உள்ளது. அதனால் தான் பொறுத்தது போதும் என்று மக்களுடன் களத்தில் தி.மு.க. இறங்கி போராடி வருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி தரும் வரை பாராளுமன்றத்திலும், மக்களோடு இணைந்து களத்திலும் தி.மு.க. போராடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காயமடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
- சந்தோஷ், முத்தையா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்
எட்டயபுரம் அருகே காதலிக்க மறுத்த சிறுமி மீது வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்தார். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுமி எட்டயபுரம் போலீசாருக்கு அளித்த அந்த வாக்குமூலத்தில், 'பாட்டியின் வீட்டில் தனியாக இருந்தபோது சந்தோஷ் தனது நண்பருடன் வந்தார். சந்தோஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்' என்று கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் சந்தோஷ், முத்தையா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வாலிபரால் மண்எண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி பலியானார்.
கடந்த 23-ந்தேதி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.