வழிபாடு

நினைத்ததை நிறைவேற்றும் வைஷ்ணவி தேவி

Published On 2024-04-26 04:29 GMT   |   Update On 2024-04-26 04:29 GMT
  • வடமாநிலத்தில் முக்கிய தலங்களில் வைஷ்ணவி தேவி தலமும் ஒன்று.
  • ஆண்டுதோறும் 8 மில்லியன் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.

வடமாநிலத்தில் வழிபடும் முக்கிய தலங்களில் வைஷ்ணவி தேவி தலமும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 5,200 அடி உயரத்திலும், கத்ராவின் திரிகுடா மலைத்தொடரின் மேல் 1,700 மீட்டர் உயரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் குகைக் கோவிலாக இது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அருளும் வைஷ்ணவி தேவியைத் தரிசிக்க ஆண்டுதோறும் 8 மில்லியன் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இது திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு அடுத்து, அதிகப்படியான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது.

 தல வரலாறு

ஜஸ்துமல் என்னும் தேவி உபசாகருக்கு, வைஷ்ணவி தேவியே மகளாக பிறந்தாள். அழகும் அறிவும் கொண்டு வளர்ந்த வைஷ்ணவி தேவி, மங்கைப்பருவம் எய்தினாள். அவளது அழகில் மயங்கிய பைரவன் என்னும் அசுரன், அவளைத் துரத்தினான். அசுரனிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஓடிய வைஷ்ணவி தேவி, ஒரு குகையில் போய் ஒளிந்துகொண்டாள். அங்கே அவளுடைய சுய சொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட்டது. இதையடுத்து அந்த அன்னையானவள், குகைக்கு வெளியே வந்து அந்த அசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள்.

வைஷ்ணவி தேவி, அசுரனின் தலையை வெட்டியபோது, அவன் உடல் குகையின் வாசலிலும், பைரவகாடி அருகில் உள்ள மலையில் அவனது தலையும் விழுந்தது. அந்த அசுரன் இறக்கும் தருவாயில் தன் தவறை உணர்ந்து, வைஷ்ணவி தேவியிடம் மன்னிப்பு கேட்டான். அதைக் கேட்டு மனம் இரங்கிய அன்னை, "பிற்காலத்தில் இந்தக் குகைக் கோவிலை நாடி வரும் பக்தர்களின் பாதம் பட்டு, நீ முக்தியை பெறுவாய்" என்று வரமளித்தாள்.

இன்றும் குகை கோவிலுக்கு வரும் பக்தர்கள், திரும்பிச் செல்லும்போது, பைரவகாடிக்குச் சென்று அந்த அசுரனையும் வழிபட்டுச் செல்கிறார்கள். அன்று வைஷ்ணவி தேவி அசுரனுக்கு அஞ்சி ஒளிந் திருந்த குகையே, இன்று வைஷ்ணவி தேவி கோவிலாக விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் வைஷ்ணவி தேவிக்கு சிலை வடிவம் இல்லை. அன்னை இங்கு அரூபமாக இருந்து அருள்பாலிக்கிறாள். இந்த ஆலயம் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்கள் தவிர, மற்ற அனைத்து மாதங்களிலும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இங்குள்ள கருவறையில், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்துக்கு வருபவர்கள் முதலில் ஜம்முவுக்கு வந்து, அங்கிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கட்ரா என்னும் சிறிய ஊருக்குள் வரவேண்டும். அங்கு வைஷ்ணவி தேவியைத் தரிசிக்க பதிவு செய்துகொள்ள வேண்டும். குழுவாகவோ, தனி நபராகவோ நமது விவரங்களைக் கொடுத்தால் இலவச தரிசன டிக்கெட்டுகளை அங்கிருக்கும் வைஷ்ணோதேவி போர்டு வழங்குகிறது. இந்த டிக்கெட்டுகள் இருந்தால் தான் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மலைப்பாதையில் நடக்க இயலாதவர்கள், குதிரை அல்லது டோலி மூலமாக செல்லவும் வசதிகள் உள்ளன. பக்தர்கள் 'ஜெய் மாதா' என்ற கோஷத்துடன் மலைப்பாதையில் நடந்து சென்று வைஷ்ணவி தேவியை தரிசிக்கிறார்கள். மலைப் பாதை தொடங்கத்தில் உள்ள பாண்கங்கா என்ற நதியில் முதலில் நீராட வேண்டும்.

இந்த நதியானது, வைஷ்ணவி தேவி தொடுத்த பாணத்தால் உருவானதாக சொல்கிறார்கள். அங்கிருந்து சரண்பாதுகா என்ற இடத்தை அடையலாம். இது வைஷ்ணவி தேவி இளைப்பாறிய இடம். மொத்தம் 12 கிலோமீட்டர் தூரம் உள்ள மலைப்பாதையில், முதல் 10 கிலோமீட்டர் தூரம் ஏற்றமாகவும், அடுத்த 2 கிலோமீட்டர் தூரம் இறக்கமாவும் அமைந்திருக்கிறது.

இந்த 12 கிலோமீட்டர்களையும் கடக்கும்போது, பக்தர்கள் மிகுந்த களைப்பை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அதற்காக வழியில் ஜூஸ், காபி கடைகளும், அவசரத்துக்கு உதவ மருந்துக் கடைகளும் இருக்கின்றன.

செல்லும் வழியில் குகை ஒன்று உள்ளது. அந்த குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்கிரகத்தை தரிசித்து பின்னர் பயணத்தைத் தொடரவேண்டும். தேவியை தரிசிப்பதற்கு சுமார் 1 கிலோமீட்டருக்கு முன்பு பூஜைக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். குகைக் கோவிலை அடைந்தவுடன் கர்ப்பக்கிரகம் உள்ளது. அதன் உள்ளே இடதுபுறம் சரஸ்வதி தேவியும், வலது புறம் துர்க்கையும், நடுவில் மகாலட்சுமியும் உள்ளனர். இந்த மூன்று சக்திகளின் உருவமே வைஷ்ணவி தேவி என்று சொல்கிறார்கள்.

இவ்வாலயத்தில் உள்ள வைஷ்ணவி தேவியிடம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தேவியை தரிசித்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக நாணயங்களைக் கொடுப்பார்கள். அதைக் கொண்டுவந்து வீட்டில் வைத்தால் எதிரிகள் பயம் விலகும். அச்சம் நீங்கும். செல்வம் நிலைக்கும் என்கிறார்கள்.

 

Tags:    

Similar News