உடல் பருமனை குறைக்கும்போது தவிர்க்க வேண்டியவை!
- உணவை தவிர்த்தால் உடல் எடை குறைந்துவிடும் என்பது தவறான கருத்து.
- வளர்சிதை மாற்றத்தை உருவாக்கும்.
உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள். சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் உடல் எடை குறைப்பு யுக்திகளை பின்பற்றுகிறார்கள்.
அவற்றை முறையாக கடைப்பிடிக்காமலும், உடற்பயிற்சி நிபுணர்களிடம் கலந்தாலோசிக்காமலும் நடைமுறைப்படுத்துவதால் பல்வேறு பக்கவிளைவுகளை எதிர்கொள்கிறார்கள். உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பார்போம்...
உணவை தவிர்ப்பது
உணவை தவிர்த்தால் உடல் எடை குறைந்துவிடும் என்பது தவறான கருத்து. உணவை தவிர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். ஒரு வேளை உணவை சாப்பிடாமல் இருந்தால் அடுத்த வேளை அளவுக்கு அதிகமாக சாப்பிட தூண்டிவிடும்.
அது உடல் பருமனை அதிகப்படுத்துமே தவிர குறைப்பதற்கு வழிவகுக்காது. அதற்கு பதிலாக வளர்சிதை மாற்றம் சுறுசுறுப்பாக நடைபெறுவதற்கு சமச்சீர் உணவுகளையும், ஆரோக்கியமான சிற்றுண்டிகளையும் உண்ண வேண்டும்.
அதிகமாக உண்பது
சத்தான உணவுகளை உண்பது முக்கியம் என்றாலும், அவற்றை அதிகமாக சாப்பிடுவதும் நல்லதல்ல. குறிப்பாக பாதாம், முந்திரி, வால்நட் உள்ளிட்ட நட்ஸ் வகைகள், அவகேடோ, முழு தானியங்கள் போன்றவை ஆரோக்கியமானவை, ஊட்டச்சத்துமிக்கவை என்றாலும் கூட அளவாகத்தான் உட்கொள்ள வேண்டும். அவற்றை அதிகம் உட்கொள்வதும் உடல் பருமன் விஷயத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கடினமான பயிற்சியை புறக்கணிப்பது
பெண்கள் பலரும் உடல் எடையை குறைப்பதற்கு கார்டியோ பயிற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் பளு தூக்குதல் உள்ளிட்ட சில கடினமான பயிற்சிகளை புறக்கணிக்கிறார்கள்.
அத்தகைய பயிற்சிகளை சமமாக மேற்கொள்வதும் முக்கியமானது. அவை தசையை கட்டமைப்பது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்வது, உடல் எடையை குறைத்து சீராக பராமரிக்க வழிவகை செய்வது போன்ற நன்மைகளை வழங்கக்கூடியவை.
நிபுணர்களின் ஆலோசனையை புறக்கணிப்பது
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முதலில் உடற்பயிற்சி நிபுணரை அணுகி ஆலோசனை கேட்பது அவசியமானது. ஏனெனில் ஒவ்வொருவரின் உடல் எடை, உயரம், உடல் வாகுக்கு ஏற்ப உடற்பயிற்சி முறையை அமைத்துக்கொள்வதற்கு அவர்கள் வழிகாட்டுவார்கள். அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவதுதான் சரியான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு உதவிடும்.
அடையமுடியாத இலக்குகளை அமைப்பது
உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் அடைய முடியாத இலக்குகளை நிர்ணயிப்பது விரக்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும். யதார்த்தமான, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்ப செயல்படுவது சிறப்பானது.
உடல் சமிக்ஞையை கவனிக்காதது
பசியாக இருக்கும்போதும், சாப்பிடும்போதும் போதுமான அளவு உட்கொண்டுவிட்டோமா என்பதை அறிவதற்கும் உடல் சமிக்ஞையை கேட்பது முக்கியமானது. வேலையின்போது கடும் பசியில் இருக்கும்போதுதான் பலரும் சாப்பிடுவது பற்றி சிந்திக்கிறார்கள்.
லேசாக பசி எடுக்கும்போதே உடல் சமிக்ஞை கொடுத்துவிடும். அதுபோல் அதிகமாக சாப்பிடும்போது உடல் எச்சரிக்கை செய்யும். எனவே திருப்தியாக சாப்பிட்டுவிட்டதாக உணருவதற்கு முன்பே சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.