பொது மருத்துவம்

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தினசரி பழக்கவழக்கங்கள்

Published On 2024-09-30 03:11 GMT   |   Update On 2024-09-30 03:11 GMT
  • நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் முக்கியமானது.
  • வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பருவநிலை மாறும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் பலரையும் ஆட்கொள்ளும். இத்தகைய நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாவதற்கு நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருப்பதும் காரணமாக அமைகிறது. அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களும் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. அந்த பழக்கவழக்கங்கள் பற்றியும் அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பார்ப்போம்.

ஆழ்ந்த தூக்கமின்மை

நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் முக்கியமானது. தூக்கத்தின்போது உடல் சைட்டோகைன்களை உற்பத்தி செய்யும். இதுதான் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவி புரியும். போதுமான நேரமோ, ஆழ்ந்தோ தூங்காதபோது இந்த சைட்டோகைன்களின் உற்பத்தி குறையும்.

மேலும் நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் மற்றும் செல்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து எளிதில் நோய்த்தொற்று நெருங்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தினமும் ஆழ்ந்து தூங்குவது அவசியமானது.

மன அழுத்தம்

நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். அதனால் ஏற்படும் அதிக மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும். எனவே மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமானது.

உணவு பழக்கம்

கொழுப்புகள் அதிகம் கலந்திருக்கும் உணவுகள், குறிப்பாக நிறைவுற்ற கொழுப்புகளை உள்ளடக்கிய உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை பாதிக்கும். உடல் நோயை எதிர்த்துப் போராடும் திறனையும் குறைக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லதல்ல.

நோய் எதிர்ப்புக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான ஏ, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் குறைவது உடலை பலவீனப்படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பாழ்படுத்திவிடும். அதனால் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

 

சர்க்கரை உட்கொள்ளுதல்

அதிக சர்க்கரை கலந்திருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். புரத அழற்சியை அதிகரிக்கும். குடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் சமநிலையையும் சீர்குலைக்கும். எனவே சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பலகாரங்கள், உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

வைட்டமின் டி பற்றாக்குறை

வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் நோய்த்தொற்றுகள் எளிதில் ஆட்கொண்டுவிடும். வெளியில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடாமல் அறைக்குள் முடங்கி கிடப்பவர்களில் பலர் வைட்டமின் டி குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

எனவே தினமும் காலையில் குறிப்பிட்ட நேரம் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அத்துடன் வைட்டமின் குறைபாடு இருக்கிறதா? என்று பரிசோதித்து டாக்டர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.

ஆன்டி பயாடிக் பயன்பாடு

பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன் படுத்துவது நல்லது என்றாலும் அதனை அதிகம் பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும்.

அடிக்கடி ஆன்டிபயாடிக் பயன்படுத்துவது குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவின் சமநிலையையும் சீர்குலைக்கும். இதுதான் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே டாக்டரின் பரிந்துரைக்கேற்ப அளவோடு ஆன்டிபயாடிக் மருந்து, மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும்.

உடற்பயிற்சி இன்மை

உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது ஆரோக்கியத்தை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கும், அவற்றின் வேலைகளை திறம்பட செய்து முடிப்பதற்கும் துணை புரியும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது போன்ற பழக்கங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழி வகுக்கும்.

சுகாதார நடைமுறைகள்

சுகாதாரத்தை முறையாக பின்பற்றாவிட்டால் நோய்க்கிருமிகள் எளிதில் உற்பத்தியாகி நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் தவறாமல் கைகளைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவி நோய்களுக்கு நம்மை ஆளாக்கிவிடும்.

Tags:    

Similar News