பொது மருத்துவம்

ரசித்து ருசித்து உண்போம் நீரிழிவு நோயை தள்ளி வைப்போம்

Published On 2022-11-14 08:03 GMT   |   Update On 2022-11-14 08:03 GMT
  • நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.
  • தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது.

நாம் உண்ணுகின்ற உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ணாலே நம் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.

இதில் மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவு நாம் ரசித்து உண்ண வேண்டும் என்றால் நமக்கு அது பிடித்த உணவாக இருக்க வேண்டும். பிடித்த உணவாக இருக்கும்போது நம் வாயில் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்கும் மேலும் நாம் நமக்கு பிடித்த உணவை சுவைத்து உண்ணும் போது போதுமான அளவுக்கு நன்கு உணவை வாயில் அரைத்து உண்போம்.

இவ்வாறு உண்ணும் போது கிட்டத்தட்ட உணவு வாயிலேயே பாதி அளவுக்கு ஜீரணமாக கூடிய நிலையில் இருக்கும். மேலும் ஏனோ தானோ என்று உணவை மென்று முழங்குவதை விட ரசித்து ருசித்து உண்ணும் போதும் நம் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் உடலுக்கு போதுமான தெம்பை மனம் அளிக்கும். நம்முடைய தினப்படி செயல்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் போதுமான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களும் சுரக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனம் உடலோடு நேரடியாக தொடர்புடையது. உள்ளத்தின் ஆரோக்கியம் உடலின் பூரண ஆரோக்கியத்தை அழைத்து வரும் என்றால் மிகை இல்லை. ஒருவர் என்ன மாதிரியான உணவுகள் தன் உடலுக்கு ஒத்துப் போகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கால நேரத்துடன் அளவான பிடித்த உணவை சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் எனலாம். நம் தினப்படி வாழ்க்கை முறை மன அழுத்தத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது. நாம் நிறைய வாட்ஸப் காணொளிகள் மற்றும் பதிவுகளில் பார்க்கின்றோம். இவைகளில் வரக்கூடிய தகவல்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் கூட அரைகுறையாக ஏதேனும் பதிவுகளை வெளியிட்டு இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவர்கள் ஆலோசனை அவசியம்.

Tags:    

Similar News