பொது மருத்துவம்

இளநீர் பருகுவதற்கு ஏற்ற நேரம் எது தெரியுமா...?

Published On 2024-06-30 02:55 GMT   |   Update On 2024-06-30 02:55 GMT
  • இயற்கையின் அற்புதங்களுள் ஒன்று இளநீர்.
  • நீரிழப்பு, வெப்ப பக்கவாதத்தில் இருந்து காக்கும்.

இளநீர் இயற்கையின் அற்புதங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. வேரில் இருந்து உறிஞ்சப்படும் நீரை தென்னை மரம் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உச்சி பகுதியில் காய்க்கும் தேங்காயில் சேமித்து வைத்து ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. அதில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன.

குறைந்த கலோரியும், கொழுப்பு இல்லா தன்மையும் இளநீரை அனைவருக்கும் ஏற்ற பானமாக மாற்றுகிறது. இளநீரில் இருக்கும் ஒவ்வொரு துளியும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கு ஊட்டச்சத்தையும் அளிக்கும். நீரிழப்பு, வெப்ப பக்கவாதத்தில் இருந்து காக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். எலக்ட்ரோலைட் சமநிலையின்மையில் இருந்து உடலை பாதுகாக்கும்.

காலையில் நடைப்பயிற்சி செய்து முடித்ததும் பலர் இளநீர் அருந்தும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி பருகுவது உடலை வெப்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும். உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.

இளநீர் எந்த நேரத்தில் பருகுவது சரியானது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் இளநீர் பருகுவதற்கு சரியான நேரம் ஏதும் இல்லை. காலையில் வெறும் வயிற்றிலும், மதிய உணவுக்கு பிறகும், இரவில் சாப்பிட்ட பிறகும் பருகலாம். மற்ற நேரங்களிலும் கூட பருகலாம். அதேவேளையில் பருகும் நேரத்திற்கு ஏற்ப அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அமையும்.

நடைப்பயிற்சி அல்லது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் காலை வேளையில் பயிற்சியை முடித்ததும் இளநீர் பருகுவது உடல் சோர்வை போக்கும். உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். உடற்பயிற்சி செய்தபோது ஏற்பட்ட நீர் இழப்பை ஈடு செய்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

மதியம் சாப்பிட்ட பிறகு இளநீர் பருகுவதன் மூலம் செரிமான செயல்பாடுகள் மேம்படும். இரவு உணவு உட்கொண்ட பிறகு இளநீர் பருகுவது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.


சிறுநீரக பிரச்சினைகள் அல்லது கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இளநீர் பருகக்கூடாது.

100 மி.லி. இளநீரில் 18 கலோரிகளே உள்ளன. 0.2 கிராம் புரதமும், 4.5 கிராம் கார்போஹைட்ரேட்டும், 4.1 கிராம் சர்க்கரையும், 165 மில்லி கிராம் பொட்டாசியமும் உள்ளடங்கி இருக்கின்றன.

Tags:    

Similar News