பெண்கள் உலகம்

பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள்

Published On 2025-03-08 11:03 IST   |   Update On 2025-03-08 11:03:00 IST
  • அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.
  • விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமை செய்யும் விஷயம் தாய்மைப்பேறு அடைவதாகும். குழந்தையை கருவில் தாங்கி அதை சீராக போற்றி வளர்த்து, பெற்றெடுத்து, சீரும் சிறப்புமாக வளர்க்கும் பொறுப்பு தாய்க்கே உரியது.

குழந்தைப்பேறுக்குப் பின்னர் உடலில் உள்ள காயங்களை ஆற்றும் வகையில் மஞ்சள் செயல்படுகிறது. மஞ்சளில் விட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் அடங்கியிருப்பதால் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற காயங்களை அது விரைவாக குணப்படுத்துவதோடு, உடல் வீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. அதனால் ஒரு டம்ளர் பசும்பாலுடன் சிறிதளவு நல்ல மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.

குழந்தை பேற்றுக்குப்பின் பின்னர் தாயின் உடலில் பல்வேறு சத்துக்களின் இழப்பு ஏற்பட்டு, உடல் பலவீனமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டிய பெரும் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அதனால், அவர்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.

குழந்தை பெற்றெடுத்த பின்னர் தாயின் உடல் நிலையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் மனநிலையில் அந்த தாய் பல சிக்கல்களை சந்திக்கிறாள். அந்த சிக்கல்களை தாங்கும் அளவுக்கு அவள் தன்னை உடல் ரீதியாக தகுதியுள்ளவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தாய்-சேய் நல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது அந்த தாய்க்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் உடல் நலனை ஏற்படுத்தும். அத்துடன் பிரசவத்தால் ஏற்பட்ட உடல் வலி, காயங்கள் ஆகியவை விரைவில் குணமடையும் விதத்திலும் அந்த உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரக்க உதவுவதாகவும் அந்த உணவு அமைவதும் அவசியம்.

ஒரு நாளைக்கு 3 முதல் 4 அவுன்ஸ் புரதச்சத்து அடங்கிய உணவுகளை அந்த தாய் எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் 4 அல்லது 5 முறை பால் மற்றும் பால் பொருட்களை உண்ணலாம். அதன் மூலம் உடலுக்கு தேவைப்படும் புரதம், கால்சியம் ஆகியவை ஈடுகட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், பல்வேறு விதைகள் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும். அதன் மூலம் உடல் சோர்வு, எடை குறைதல், வாந்தி வருதல் ஆகிய சிக்கல்கள் விலகும். பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உடல் சோர்வை அகற்றும் விதமாக இரும்புச்சத்து, விட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, பிரக்கோலி ஆகியவற்றை உண்ணலாம். அத்துடன் கீரை வகைகள், எள் சேர்த்த தின்பண்டங்களையும் உட்கொள்ளலாம்.

Tags:    

Similar News