உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை?

Published On 2023-04-07 02:21 GMT   |   Update On 2023-04-07 06:05 GMT
  • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது.
  • தமிழ் தாள் தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.

சென்னை :

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் தாள் தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், தமிழ் தாள் தேர்வை எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற விவரங்களை தேர்வுத் துறை வெளியிடவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதும், அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது, விழுப்புரத்தில் 960 பேரும், கள்ளக்குறிச்சியில் 968 பேரும், கடலூரில் 628 பேரும் தேர்வு எழுதாதது தெரியவந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு ஓராண்டாக வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்களும் இந்த 'ஆப்சென்ட்' பட்டியலில்தான் வருவார்கள்.

அந்த வகையில் பிளஸ்-2 தேர்வை போலவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதவில்லை என்ற தகவல்கள் நேற்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தின.

ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத் தேர்வில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆப்சென்ட் ஆனதால், பொதுத் தேர்விலும் அது எதிரொலிக்கும் என நினைத்து கல்வித் துறை திட்டமிட்டே புள்ளி விவரங்களை வெளியிடவில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் மூலம் பெரும்பாலான மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதவில்லை என்ற பேச்சு நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிடக்கூடிய தேர்வுத் துறைக்கு அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 'ஆப்சென்ட்' பட்டியல் வந்த நிலையிலும், அதை வெளியிட மறுப்பது ஏன்? என்பதுதான் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரின் கேள்வியாக இருக்கிறது.

Tags:    

Similar News