திம்பம் மலைப்பகுதியில் இன்று காலை சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
- வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
- தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதை 21 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்வதற்கான மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.
திம்பம் மலைப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. விபத்து ஏற்படும் நேரங்களில் தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.
இந்நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு காய்கறி லோடுகளை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று திம்பம் மலைப்பகுதியில் உள்ள 7-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினர். 7-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்ததால் தமிழக-கர்நாடக இடையேயான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பிறகு பண்ணாரியில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேன் மீட்கப்பட்டது. அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.