உள்ளூர் செய்திகள்

ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு:பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2024-07-21 05:51 GMT   |   Update On 2024-07-21 05:51 GMT
  • தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது.
  • நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி:

கோவை மாவட்ட த்தில் பி.ஏ.பி.பாசனத்தி ட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஆழியாறு அணைக்கட்டு 120 அடி உயரம்கொண்டது. இங்கு 3864 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய-புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை கைகொடுக்காததால் ஆழியாறு அணை நிரம்பவில்லை. ஆனால் இந்தாண்டு நவமலை, வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர்நீர்வரத்து உள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 16-ந்தேதி 91 அடி என்ற அளவில் இருந்த நீர்மட்டம் 18-ந்தேதி 100 அடியை தொட்டது. நேற்று காலை 8 மணிக்கு 109.30 அடியாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது.

ஆழியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2634 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில்ஆழியாறு, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடவேண்டுமென ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆழியாறு அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆழியாறு நீர்மட்டம் 115 அடியை தாண்டியதும் 2-வது கட்ட மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து 118 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து நீர்வரத்தும் அதிகமாக இருந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும்' என்று தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News