காதல் திருமணம் செய்த மகன் ஆணவ கொலை- உதவி செய்த தாயை வெட்டி வீசிய விவசாயி
- சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
- சுபாஷ்-அனுசுயா திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு வந்ததால் அவர்கள் கடந்த 27-ந்தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50), விவசாயி. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், சுபாஷ் (26) என்ற மகனும் உள்ளனர்.
சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு சுபாஷின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுபாஷ்-அனுசுயா திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு வந்ததால் அவர்கள் கடந்த 27-ந்தேதி திருப்பூரில் உள்ள கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சுபாஷ் தனது மனைவி அனுசுயாவை அழைத்து கொண்டு நேற்று சொந்த ஊரான அருணபதிக்கு வந்தார். அப்போது புதுமண தம்பதியான சுபாஷ்-அனுசுயா இருவரும் தண்டபாணி வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
தனது எதிர்ப்பை மீறி தனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனம் தாங்காமல் விரக்தியடைந்த தண்டபாணி 2 பேரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து வைத்தனர்.
இருவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது சுபாஷின் பாட்டி கண்ணம்மா அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார்.
தன்னுடைய பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டு வந்த மகனுக்கு தனது தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்த செய்தி தண்டபாணிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அப்போது கோபத்தில் இருந்த தண்டபாணி தனது தாய் கண்ணம்மா வீட்டிற்கு சென்று என் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்ட அவர்களை வெளியே அனுப்பாமல் என்னை மேலும் அவமானப்படுத்தும் விதமாக வீட்டிற்குள் எப்படி அனுமதித்தாய்? என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷையும், கண்ணம்மாவையும் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த மருமகள் அனுசுயாவையும் அவர் சரமாரியாக வெட்டினார். இதனால் 3 பேரும் வலியால் பயங்கரமாக அலறினர்.
சிறிது நேரத்தில் சுபாஷூம், கண்ணம்மாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருமகள் அனுசுயா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா எட்வின் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் ஆணவ கொலை செய்த தண்டபாணியை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
தலைமறைவாக உள்ள தண்டபாணியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த மகனையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாட்டியையும் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.