என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிருஷ்ணகிரி
- வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பட்டப்பகலில் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் கண்ணனை, ஆனந்தகுமார் என்பவர் சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 10 மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஓசூரில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
- பெங்களூரூ கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செல்வதற்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்து உள்ளது. மேலும் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஓசூருக்கு உள்ளேயும், வெளியேயும் 5 இடங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்னெடுப்புகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதில் தனியார் ஏர்ஸ்ட்ரிப் நிறுவனமான டனேஜா ஏர்ஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் இணைந்து தளங்கள் தொடர்பான ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில் தேர்வு செய்யப்பட்ட 5 தளங்கள் தொடர்பான அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து தளங்களையும் பார்வையிட்டதாகவும், ஒவ்வொரு தளத்தின் நன்மை தீமைகளுடன் கூடிய ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விரைவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாகவும் அதில் 5 தளங்களில் இருந்து 2 தளங்களை ஆய்வு செய்து, பின்னர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.
இதில் ஓசூர் விமான ஓடுதளத்திற்கு தெற்கே 2 கிமீ தொலைவில் உள்ள தனியார் நிறுவனமான தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் மிக அருகில் ஒன்றும், ஓசூர் விமான ஓடுதளத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள தோகரை அக்ரஹாரம் அருகே ஒன்றும், ஓசூர் விமான ஓடுபாதையில் இருந்து தென்கிழக்கே 27 கிமீ தொலைவில் சூளகிரிக்கு அருகே ஒன்றும், ஓசூர் விமான நிலையத்திற்கு வடகிழக்கு 16 கி.மீ. தொலைவில் தசப்பள்ளி அருகே ஒன்றும் தமிழக அரசு சர்வதேச விமான நிலையத்திற்காக முன்மொழியப்பட்ட தளங்கள் ஆகும். தற்போதைய ஓசூர் விமான ஓடுதளம் உட்பட 5 இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த 5 தளங்களில் ஒவ்வொன்றிலும் சில சிக்கல்கள் உள்ளது. அதில் ஒரு தளம் நீர்நிலை அருகே உள்ளது. மேலும் மற்ற 2 தளங்கள் அருகே உயர் அழுத்த கம்பிகள் உள்ளது. மேலும் தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் அருகே உள்ள தளமும், அதில் இருந்து தெற்கே 2 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு தளமும் தேர்வு செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த 2 தளங்களும் இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் லிமிடெட் கட்டுப்பாடில் இருப்பதால் தமிழக அரசு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரூ கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செல்வதற்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் விமான ஓசூர் விமான நிலையத்திற்கு வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பெங்களூருவில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கியுள்ள சூழலில் தமிழக அரசு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் போட்டு கொண்ட ஒப்பந்தத்தின்படி, 150 கிலோமீட்டர் தூரத்திற்குள் வேறு எந்த விமான நிலையமும் இருக்கக்கூடாது.
இதனால் தமிழக அரசுக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டால் ஓசூர் விமான நிலையம் அமைக்க அனுமதி பெற்று பின்னர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வருவதற்கு 8 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. இதை எப்படி தமிழக அரசு கையாளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
- பிற வக்கீல்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- வக்கீல் கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி தாலுகா அலுவலக சாலையில் உள்ள கோர்ட் வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், மூன்று கோர்ட்டுகள், மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையம், பி.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தினமும் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள், போலீசார் மற்றும் வக்கீல்கள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக வந்து இருந்தனர்.
ஓசூரைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் கண்ணன் (வயது 30), வக்கீல். இவர் ஓசூர் உழவர் சந்தை அருகில் உள்ள மூத்த வக்கீல் சத்யநாராயணன் என்பவரிடம் ஜூனியர் வக்கீலாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மதியம் கோர்ட்டில் வழக்கு சம்மந்தமாக ஆஜராகிவிட்டு வெளியே நடந்து வந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த ஓசூர் நாமல்பேட்டை பகுதியை சேர்ந்த குமாஸ்தா ஆனந்தகுமார் (39) என்பவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை, ஆனந்தகுமார் ஆட்டை வெட்டுவதை போல தலை, முகம், கழுத்து உள்பட உடலில் 8 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
கோர்ட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் வக்கீல் கண்ணனை ஆத்திரம் தீர வெட்டி தள்ளிய ஆனந்தகுமார் பின்னர் அங்கிருந்து எந்தவித பதற்றமும் இன்றி, நேராக ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அரிவாளுடன் சென்றார். அங்கு மாஜிஸ்திரேட்டு முன்பு அவர் சரண் அடைந்தார்.
இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வக்கீல் கண்ணன் துடிதுடித்து உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்ட பிற வக்கீல்கள் அங்கு ஓடி வந்தனர்.
அவர்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கழுத்து, முகம் பகுதியில் வெட்டுகாயம் ஏற்பட்டதால் நள்ளிரவு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட வக்கீல் கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால் ஆனந்தகுமார் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்தியவதி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்கறிஞர் கண்ணனை ஆனந்தன் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
- இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் ஜூனியர் வழக்கறிஞர் கண்ணனை பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
- வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தில் இரண்டாவது பெரிய வாரசந்தையாகும் இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில் இந்த சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆடு, கோழி வளர்ப்புத் தொழில் பிரதான தொழிலாக உள்ள நிலையில் வறட்சி காலங்களில் விவசாயம் பொய்த்து போனாலும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.
இவ்வாறாக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் பொழுது அந்த ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ஆடுகளை கோவில் விழாக்களில் அசைவ விருந்துக்காகவும், ஆடுகளை வளர்ப்பதற்காகவும் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போச்சம்பள்ளி வார சந்தை தேடி ஆடுகளை வாங்க வந்து செல்கின்றனர்,
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரார் மணிகண்டன் (வயது35) என்பவர் ஆடுகளை வளர்க்க கடந்த வாரம் 20-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை சுமார் ரூ.2.38 லட்சம் கொடுத்து வாங்கி சென்றார். இதில் 8 ஆடுகள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டது. அப்போது அந்த ஆடுகளின் வயிற்றில் மண் கரைசல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மணிகண்டனுக்கு ஆடுகளை விற்ற கரகூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகளிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரிகள் சரிவர பதிலளிக்காமல் மிரட்டியுள்ளனர். இதனால் மணிகண்டன் அவரது உறவினருடன் போச்சம் பள்ளி வாரசந்தையில் இன்று வியாபாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடு வியாபாரிகளின் தொழில் போட்டியின் காரணமாக சிலர் ஆட்டின் வாயில் சேற்று தண்ணீரை கரைத்து வாயில் ஊற்றி அதன் எடையை அதிகரித்து காட்டுகின்றனர். சிலர் இந்த மோசமான செயலால் ஈடுபட்டு வருவதால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் செயல்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதும், கடந்த 2018-ம் ஆண்டு, போலி டாக்டர் என இவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.
- நடராஜ் என்ற பெயரில் கிளினிக் வைத்து அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியில் மெகபூப் வளி என்பவர் 10-ம் வரை படித்து விட்டு பொதுமக்களுக்கு மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவ துறையினருக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில் ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஞானமீனாட்சி, சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜூவ்காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ராம் நகரில் உள்ள கிளினிக்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது மெகபூப்வளி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர், ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதும், கடந்த 2018-ம் ஆண்டு, போலி டாக்டர் என இவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவத்துறையினர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், போலி டாக்டர் மெகபூப் வளியை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரை, ஊசி ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து கிளினிக்கை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி, பழைய பேட்டை அருந்ததி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(வயது42).
இவர் அதே பகுதியில் நடராஜ் என்ற பெயரில் கிளினிக் வைத்து அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார். மருத்துவம் படிக்காமல் இவர் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சண்முகவேல் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் கிளீனிக்கில் ஆய்வு செய்தனர். அப்போது நாகராஜ் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. சண்முகவேல் அளித்த புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.
- ஒற்றை காட்டு யானை அனுமய்யாவை திடீரென்று துரத்தி சென்று தாக்கியது.
- யானை தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஓட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட கூலி தொழிலாளி அனுமய்யா (வயது44). இவர் இன்று அதிகாலை கட்டிட வேலை செய்வதற்காக தனது கிராமத்திலிருந்து அந்தேவனப்பள்ளி கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது ஆலஹள்ளி கிராமத்தின் அருகே அவர் நடந்து சென்றபோது அப்பகுதியில் வந்த ஒற்றை காட்டு யானை அனுமய்யாவை திடீரென்று துரத்தி சென்று தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினர். அவரது அலறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
இதனையடுத்து அங்கு நின்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆலஹள்ளி, ஒட்டர்பாளையம், மணியம்பாடி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த யானைகளை அடர்ந்த ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.
யானை தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார்.
- வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சின்னத்தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.
மத்தூர்:
மத்தூர் அருகே மாதம்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி (வயது 65). மத்தூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார். அவர் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கோட்ட வருவாய் ஆய்வாளர் ஷாஜகான், போச்சம்பள்ளி தாசில்தார் சத்தியா, கிராம நிர்வாக அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சின்னத்தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.
மத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவுதம், ஒட்டப்பட்டி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியில் பாஜக இருக்காது.
- மக்கள் விரோத திராவிட முன்னேற்ற கழக அரசு அகற்றப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாஜகவுடன் கூட்டணி இல்லை.
* ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்.
* அதிமுக அமைக்கும் மெகா கூட்டணியில் பாஜக இருக்காது.
* பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை பல இடங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்.
* பாராளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை தெளிவுபடுத்தி விட்டோம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். அதை தவிர்த்து தான் பேசிக்கொண்டிருக்கிறோம். மீண்டும் மீண்டும் இந்த கேள்வியை எழுப்ப வேண்டாம்.
* மக்கள் விரோத திராவிட முன்னேற்ற கழக அரசு அகற்றப்பட வேண்டும்.
* நான் வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான்.
* ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி அதிமுக கட்சி தான்.
* அதிமுக ஆட்சியில் தான் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சி தலைவி காலத்திலும், அம்மா மறைவுக்கு பின் அம்மாவுடைய அரசும் சரி நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க அதிமுக அரசு தான் காரணம் என்று கூறினார்.
- மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.
- கவுரி நடத்தி வந்த கிளினிக் மற்றும் லேப், மருந்தகம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஓசூர்:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் கவுரி (வயது 34). இவர், ஓசூர் அரசனட்டி பகுதியில் தங்கி இருந்து கிளினிக், லேப் மற்றும் மருந்தகம் ஆகியவற்றை நடத்தி வந்தார். டி-பார்ம், பி.இ.எம்.எஸ். வரை மட்டுமே படித்த இவர், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.
அதே போல் இவரது கிளினிக்கில் வேலை பார்த்து வந்த ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த சிலம்பரசி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு அவரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மூக்கண்டப்பள்ளி அரசனட்டி பகுதிக்கு சென்று கவுரி நடத்தி வந்த கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கவுரியும், சிலம்பரசியும் போலி டாக்டர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவத்துறையினர் அளித்த புகாரின் பேரில் 2 பேரையும் ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கவுரி நடத்தி வந்த கிளினிக் மற்றும் லேப், மருந்தகம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கிருஷ்ணகிரியில் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
- நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிற்பகல் 1.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, பனங்காட்டூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
- வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
- கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்ல கிராமத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை இழிவுபடுத்தி பேசி, கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் நாச்சியப்பன், நகர துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெல்லியரசு, அருண், சென்ன கிருஷ்ணன், செல்வம், ராஜேந்திரன், குமார், ரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இந்த போராட்டத்தில் சமூக முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கவுன்சிலர்கள் குமரேசன், பூபதி, நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி, உழவர் பேரியக்கம் ராஜா, சிவா, கோவிந்தசாமி, சேட்டு, சின்னக்கண்ணு, சதீஷ், தமிழரசன் உள்ளிட்ட 44-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் அனுமதி இல்லாததால் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் ஊத்தங்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 44 பா.ம.க வினரை கைது செய்து ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்