- கோதைமங்களத்தில் வறட்சியால் பயிர்கள் வாடியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
- அரசு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரிக்கை
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோதைமங்களம் பகுதியில் சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். வானம் பார்த்த பூமியாக மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் என்ற நிலையில் இப்பகுதியில் போதிய மழை இல்லாததாலும், வரத்துவாரி மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வராததாலும் இப்பகுதி விவசாயிகள் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றனர். விவசாயம் செய்து 150 நாட்களை கடந்த நிலையில் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதால், விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் வட்டிக்கு மற்றும் வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்திருந்தோம், ஆனால் பயிர்கள் வளர்ந்து கதிர் அறுக்கும் தருவாயில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டது. எங்கள் பகுதி கண்மாய்க்கு வர வேண்டிய வரத்து வாய்க்கால்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கண்மாய் வர வேண்டிய உபரிநீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அருகாமையில் ஓடக்கூடிய தண்ணீரை முறையாக வரத்து வாய்க்கால் தூர்வாரியிருந்தால் எங்கள் பகுதி விவசாயம் செழித்திருக்கும், ஆனால் அதிகாரிகள் யாரும் இதற்கு முற்படவில்லை.வரத்து வாரி தூர் வாரப்படாததாலும், போதிய மழை இல்லாததாலும் கைக்கு வந்த விவசாயம் கருகி போய்விட்டது.இந்த சூழ்நிலையில் இந்தாண்டு பொங்கல் எங்களுக்கு கசப்பான பொங்கலாக தோன்றுகிறது. எனவே தமிழ அரசு உடனடியாக தலையிட்டு உரிய நிவாரணம் கிடைக்கவும், வரத்து வாரியை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.