உள்ளூர் செய்திகள்

குமரியில் கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

Published On 2024-06-27 05:16 GMT   |   Update On 2024-06-27 05:16 GMT
  • வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
  • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.

இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.

அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.

அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 28.8,

பெருஞ்சாணி 32.4,

சிற்றார் 1-16.4,

சிற்றார் 2-18.2,

கன்னிமார் 6.2,

கொட்டாரம் 3,

மயிலாடி 4.8,

நாகர்கோவில் 5.4,

பூதப்பாண்டி 12.4,

முக்கடல் 10.4,

பாலமோர் 52.4,

தக்கலை 10,

குளச்சல் 5,

இரணியல் 6,

அடையாமடை 21,

குருந்தன்கோடு 3.8,

கோழிப்போர்விளை 12.4,

மாம்பழத்துறையாறு 6.4,

களியல் 18.6,

குழித்துறை 12.4,

புத்தன் அணை 29.2,

சுருளோடு 6.2,

ஆணைக்கிடங்கு 5,

திற்பரப்பு 14.8,

முள்ளங்கினாவிளை 14.8.

Tags:    

Similar News