உள்ளூர் செய்திகள்

உள்ளாட்சி காலி பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும்-கே.என்.நேரு

Published On 2024-08-05 08:51 GMT   |   Update On 2024-08-05 08:51 GMT
  • நில மதிப்பு அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • காலிபணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை:

கோவை காந்திபுரத்தில் மத்திய ஜெயிலின் அருகே ரூ.130 கோடியில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது.

இங்கு நடைபெற்று வரும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அங்கு நடைபெற்று வரும் பணிகள், குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரனிடம் கேட்டறிந்தனர். அவர்கள் வரைபடத்துடன் அமைச்சர்களுக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் செம்மொழி பூங்கா கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இங்கு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட காலிபணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 2,500 காலி பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரப்பப்பட உள்ளது. இதில் 85 சதவீதம் தேர்வு மூலமாகவும், மீதி 15 சதவீதம் நேர்முகத் தேர்வு மூலமும் நிரப்பப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்கு நிரப்பப்படும். மீதி உள்ள காலிபணியிடங்கள் அடுத்தகட்டமாக நிரப்பப்படும்.

கோவை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்பதை தி.மு.க தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும்.

கோவை மாநகராட்சியில் 333 தீர்மானங்களை 10 நிமிடத்தில் நிறைவேற்றியதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. அனைத்து தீர்மானங்களையும் பரிசீலித்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டத்தால் கட்டண உயர்வு என்பது சரியல்ல. நிலத்தின் மதிப்பு அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி ஆகியவற்றுக்கு நில மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு மேல் கட்டணம் இருக்காது. பல இடங்களில் கட்டணம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News