பணமாக கொடுத்து பொருட்கள் வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி
- குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது.
- ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.
சென்னை:
டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. ரோட்டோர தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் முறையிலேயே வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்துகிறார்கள். இது எளிமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால் பல கடைகளில் ஆன்லைனில் செலுத்துவதற்கு பதில் பணமாக செலுத்தினால் வாங்கும் பொருள்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
சென்னை பரங்கிமலை மெயின்ரோட்டில் ஒரு பழக்கடையில் அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கடைக்காரரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நான் தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொள்முதல் செய்ய செல்கிறேன். அங்கு பணமாகத்தான் கேட்கிறார்கள். ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.
அதுமட்டுமல்ல நான் தினமும் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கிறேன். குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது. என்னிடம ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன.
வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணத்தை அதிகமாக செலுத்துவதால் எனக்கு அதிகப்படியான பரிவர்த்தனைகளுக்கான பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக மாதம் தோறும் வங்கிகள பிடித்தம் செய்கின்றன.
தேவையில்லாமல் நானும் சிரமப்பட்டு யாரோ ஒருவருக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுப்பதைவிட என்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
உதாரணத்துக்கு ஒரு வாடிக்கையாளர் 500 ரூபாய்க்கு பழங்கள் வாங்கிவிட்டு டிஜிட்டலில் பணத்தை செலுத்தினால் முழுத்தொகையும் செலுத்த வேண்டும். அதையே பணமாக தந்தால் ரூ.475 தந்தால்போதும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி என்றார்.