உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சிக்கண்ணா கல்லூரியில் நாளை, 2ம் கட்ட கவுன்சிலிங்

Published On 2023-06-07 05:14 GMT   |   Update On 2023-06-07 05:14 GMT
  • ஜூன் 8 மற்றும் 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
  • காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஜூன், 8 மற்றும், 9ம் தேதி இரு நாட்கள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இக்கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, முதல் கட்ட கவுன்சிலிங் மே, 31ல் துவங்கி, நேற்று (ஜூன், 6) வரை நடந்தது. மொத்தமுள்ள, 835 இடங்களுக்கு, 8,190 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

நாளை (8ம் தேதி) மற்றும், 9ம் தேதி இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. வணிகவியல் பாடங்களான பி.காம்., பி.காம்., சி.ஏ., படிப்புக்கு ஜூன், 8ம் தேதி காலை, 9:30 க்கும், பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., படிப்புகளுக்கு காலை, 11:30 மணிக்கும், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கும். வரும், 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு இயற்பியல் பாடப்பிரிவு கவுன்சிலிங் நடக்கிறது. வேதியியல், விலங்கியல் பாடங்களுக்கு காலை, 11:30 மணிக்கும், கணிதம், கணிணி அறிவியல், கணிணி பயன்பாடு, ஆடைவடிவமைப்பு நாகரீகம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் பாடங்களுக்கு மதியம், 1:30 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டில் www.cgac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். காலியாக இருக்கும் இடங்களுக்கு அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்படுவர்.

கவுன்சிலிங்கில் பங்கேற்க கல்லுாரிக்கு வருவோர் கட்டாயம் பெற்றோர் உடன் வருதல் வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழின் இரண்டு நகல், அசல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

உரிய நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்பது அவசியம். தாமதமாக வந்தால், அந்த நேரத்தில் பாடப்பிரிவுகளில் இருக்கும் இடங்கள் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News