உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய மத்திய அரசு மறுப்பு - திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் அதிருப்தி

Published On 2022-12-25 05:41 GMT   |   Update On 2022-12-25 05:41 GMT
  • பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
  • 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 450 கிலோவாக குறைந்துள்ளது.

திருப்பூர் :

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கருதப்படுவது ஜவுளித் தொழில். நாடு முழுவதும் ஜவுளித் தொழிலில் சுமார் 1.10 கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக, திருப்பூர் பஞ்சை நம்பியே இயங்கி வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக பஞ்சு விலையில் காணப்படும் நிலையற்றத்தன்மை காரணமாக ஜவுளி மற்றும் அதைச்சார்ந்த அனைத்துத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் ஜவுளித் தொழிலைக் காக்கும் வகையில் பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவிகிதத்தை ரத்து செய்ய வேண்டும் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ஜவுளித் தொழில் துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், ''உலக அளவில் பருத்தி சாகுபடியில் முன்னணியில் இருந்த இந்தியாவில், படிப்படியாக பருத்தி சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி ஒரு ஹெக்டேர் பரப்பில் 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 450 கிலோவாக குறைந்துள்ளது. இதனால், பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழில் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுகளை நாடவேண்டி உள்ளது.

இந்தியாவில் தற்போது ஒரு கேண்டி ரூ.67 ஆயிரமாக உள்ளது. வெளிநாட்டு பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.55 ஆயிரமாக உள்ளது. இரண்டுக்கும் இடையே 12 ஆயிரம் ரூபாய் விலை வித்தியாசம் உள்ளது. ஜிஎஸ்டி, மின்சாரக் கட்டணம், நூல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் திருப்பூரில் மட்டும் 70 சதவீதம் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூருக்கு வந்த ஆர்டர்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்ல தொடங்கிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்தது போய், இன்று வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தியாவில் 50 சதவீதம் நூற்பாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. மேலும், திருப்பூரில் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மூலப் பொருளான பஞ்சை நம்பியே ஜவுளித் தொழில் இயங்கிவரும் நிலையில் பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு எடுத்துக்கும் நிலைப்பாடு, ஜவுளித் தொழிலை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் நடவடிக்கையாக அமையும். இதன் மூலம் உள்நாட்டு வியாபாரிகளால் பஞ்சுப் பதுக்கல் அதிகரித்து, செயற்கை விலையேற்றம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

மத்திய அரசின் இந்த முடிவு, செயற்கை இழை ஆடை தயாரிப்பில் உள்ள பெருநிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமே தவிர, எங்களைப் போல், பருத்தியை நம்பி உள்ளோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறையும்போதுதான் இதன் பாதிப்பை மத்திய அரசு உணரும். ஜவுளித் தொழிலை நஷ்டத்தில் இருந்து மீட்க பஞ்சு இறக்குமதிக்கான வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.

Tags:    

Similar News