தமிழர்களின் வீரத்தை பறைச்சாற்றும் புலிக்குத்திக்கல்
- கால்நடைகள் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம்.
- கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் போது பாதுகாப்புக்காக வீரர்கள் உடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம்:
வீரம் செறிந்தது தமிழ்மண். பழங்கால தமிழர்கள் வீரத்தை போற்றி புகழ்ந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே முக்கியத் தொழிலாக இருந்தன. ஒருவரின் விளை நிலங்கள் பரப்பு மற்றும் கால்நடைகள் எண்ணிக்கையை வைத்து அவரின் சமுதாய அந்தஸ்து நிர்ணயிக்கப்பட்டது. குறுநிலமன்னர்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள், செல்வந்தர்கள், ஆயிரக்கணக்கில் ஆடுகளும், நூற்றுக்கணக்கில் மாடுகள் மற்றும் எருமைகள் வளர்த்தனர். தற்போது உள்ளதைப் போல மக்கள் தொகை அதிகம் இல்லாததால், அமராவதி ஆற்றங்கரையோரம் பலநூறு ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. அதனால் மடத்துக்குளம் பகுதியில்தொடங்கி கொமரலிங்கம், கல்லாபுரம் அமராவதி வன ச்சரகம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரை மேய்ச்சல் நிலத்தின் எல்லைகள் நீண் டிருந்தன.
இந்தப் பகுதிக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம். கோடைகாலம் மற்றும் வறட்சி ஏற்பட்ட காலங்களில் மலை அடிவார பகுதியில் தண்ணீர் மற்றும் பசுமை உள்ள பகுதியில் பட்டி அமைத்து சில வாரம் தங்கி நன்கு மேய்ந்த பின்பு, கால்நடைகளை திருப்பி அழைத்து வந்துள்ளனர். எல்லைகள் வரையறை இல்லாததால், வனப்பகுதியில் உள்ள விலங்குகள் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை வேட்டையாடின. இதைதடுக்கவும் கால்நடைகளை பாதுகாக்கவும் பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் கத்திவீசுதல், ஈட்டி எறிதல், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பலவகையான தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்தவர்களாக இருந்தனர்.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் போது பாதுகாப்புக்காக வீரர்கள் உடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு மிருகங்கள் தாக்கினால் சண்டையிட்டு அதை கொன்று கால்நடைகளைத் பாதுகாத்தனர். இந்தப் பகுதியில் அதிகளவு புலிகளின் தாக்குதல் இருந்துள்ளது. இதுபோல் புலியுடன் வீரர்கள் போராடிய இடத்தில் நினைவாக கருங்கல்லில் புடைப்பு சிற்பம் உருவாக்கி அதை வணங்குவது தமிழர்கள் வழக்கமாக இருந்துள்ளது. இந்த சிற்பத்திற்கு புலிக்குத்திக்கல் என பெயரிட்டனர்.இந்த கல்லில் வீரன் ஒருவன் புலியுடன் போராடுவது போல சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூரில் புலிக்குத்திக்கல் உள்ளது.இன்றும் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.