விபத்துக்களை தடுக்க பல்லடத்தில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- ருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது.
- 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் இணைப்பு சாலைகள், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன. வெளி மாநில வாகனங்கள், கன்டெய்னர்கள், டிப்பர், மணல் லாரிகள், சரக்கு வேன்கள், ஆம்புலன்சுகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கின்றன.
கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக பல்லடம் உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இணையாக விபத்துகள், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி ரிங் ரோடு, கரூர்- கோவை பசுமை வழிச்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. சமீபத்தில் பல்லடம் - காரணம்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் இது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்லடம் வட்டாரத்தில் நடந்த வாகன விபத்துகள், மற்றும் உயிரிழப்புகள் புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
இதில் 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 110 பேர் வரை வாகன விபத்துகளில் மட்டும் உயிரிழக்கின்றனர். இதனால் எண்ணற்ற குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல்லடத்தை காட்டிலும் குறைந்த அளவு போக்குவரத்து கொண்ட தாராபுரத்தில் கூட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல்லடம் தொகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது கானல் நீராகவே உள்ளது. எனவே சந்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களை தவிர்க்கவும் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.