ஆன்லைன் கட்டணம் செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை
- குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள அட்டையின் நோக்கமாகும்.
- இ-சேவை மையத்துக்கு வருகை தருகின்ற மூத்தகுடி மக்களுக்கு வங்கி கணக்கு,ஏடிஎம் உள்ளிட்டவை இருப்பதில்லை.
உடுமலை :
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள அட்டையின் நோக்கமாகும்.அதில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் பெயர்,முகவரி,பிற சுய குறிப்புகளும்,புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டது.அப்போது மேற்கொள்ளப்பட்ட பதிவில் ஒரு சில குறைபாடுகள் தவறுகள் இருந்ததால் அதை திருத்தம் செய்ய பொதுமக்கள் இன்றளவும் இ-சேவை மையத்தை நாடி வருகின்றனர். இந்த சூழலில் ஆதார் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்ள நேரடியாக பணத்த செலுத்தும் நடைமுறை மாறி ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.இதனால் திருத்தம் மேற்கொள்ள வருகின்ற மூத்த குடிமக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
ஆதார் எண் சேவையை வாக்காளர் அடையாள அட்டை, மின்கட்டணம், பான் கார்டு உள்ளிட்ட மற்ற சேவைகளுடன் சேர்க்கப்பட்டதால் இரட்டை பதிவு, போலிகள் கண்டறியப்பட்டது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் ஆதார் பதிவு முதன் முதலில் மேற்கொண்ட போது முகவரி, வயது, தாய் தந்தை, கணவர் பெயர், பிறந்த தேதி, செல்போன்எண் போன்றவை உள்ளீடு செய்ததில் குறைபாடுகள் இருந்து வருகிறது. அதை திருத்தம் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் சம்மந்தப்பட்ட தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த சூழலில் ஆதார் பதிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு நேரடியாக பணம் பெற்ற சூழல் மாறி ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்வாறே வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இ-சேவை மையத்துக்கு வருகை தருகின்ற மூத்தகுடி மக்களுக்கு வங்கி கணக்கு,ஏடிஎம் உள்ளிட்டவை இருப்பதில்லை. ஒரு சிலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் கூட டிஜிட்டல் பணம் பரிமாற்றத்துக்கான வழிமுறைகள் விழிப்புணர்வு தெரிவதில்லை.இதனால் மூத்த குடிமக்கள் கட்டணம் செலுத்த இயலாமல் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ஒரு சில மூத்த குடிமக்கள் அங்குள்ள வேறொருவரிடம் பணம் கொடுத்து அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றி வருகின்றனர்.அப்போது சம்பந்தப்பட்ட நபரின் இணையதளம்,வங்கிக் கணக்கு இயங்காமல் போய்விடுகிறது.இதன் காரணமாக பதிவை திருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட சேவையை தக்க தருணத்தில் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாக வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆதார் திருத்தம் மேற்கொள்ள ஆன்லைன் கட்டணம் செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளித்து முன்பு போல் நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.