காங்கிரஸ்க்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ்-க்கு செல்லும்: அமித் ஷா
- தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
- பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார்.
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி (நாளைமறுதினம்) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. நேற்று மத்திய அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் ரகசிய புரிந்துணர்வு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும். இதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.
பா.ஜனதா வேட்பாளர் ஈடால ராஜேந்தருக்கு அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம், அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெற முடியாது என்ற தெளிவான தகவலை சந்திரசேகர ராவுக்கு அனுப்ப முடியும்.
தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார். ஆனால், அந்த பதவிகள் காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் குடும்ப கட்சிகள். ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.