ஒடிசா முதல் மந்திரியாக பதவியேற்றார் மோகன் சரண் மாஜி
- ஒடிசா பழங்குடியினரின் முக்கிய முகமான மோகன் சரண் மாஜி, 4 முறை ஒடிசா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஒடிசா துணை முதல்-மந்திரிகளாக கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புவனேஸ்வர்:
பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களம் கண்டன.
இதில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை அக்கட்சி பெற்றது. ஒடிசாவில் பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
இதற்கிடையே, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் ஆகியோரின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒடிசாவின் புதிய முதல் மந்திரியாக மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்துக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராஜ்நாத் சிங் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஒடிசா பழங்குடியினரின் முக்கிய முகமான மோகன் சரண் மாஜி, 4 முறை ஒடிசா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சட்டசபையில் கட்சியின் தலைமை கொறடாவாக இவர் செயல்பட்டுள்ளார்.
ஒடிசா துணை முதல்-மந்திரிகளாக கே.வி.சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கே.வி.சிங் தியோ 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் என்பதும், பிரவாதி பரிதா முதல் முறை எம்.எல்.ஏ. என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒடிசாவின் முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்றார். புவனேஸ்வரத்தின் ஜனதா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
#WATCH | Newly sworn-in Chief Minister of Odisha, Mohan Charan Majhi with Prime Minister Narendra Modi, in Bhubaneswar. pic.twitter.com/g8Vxt5KRvf
— ANI (@ANI) June 12, 2024