ரத்த புற்றுநோயுடன் போராட்டம்... இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
- கர்ப்ப காலத்தில் அவருக்கு சாதாரண புற்றுநோய் மருந்துகள் மற்றும் கீமோதெரபியை பரிந்துரைக்க முடியவில்லை.
- தாயும் இரட்டை குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இது அரிதான நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஹீமாட்டாலஜி துறையின் உதவி பேராசிரியர் அக்ஷய் லஹோடி கூறுகையில், அந்த பெண்ணுக்கு நாள்பட்ட மைலோயிட் லுகேமியா, ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், அத்தகைய சூழ்நிலையில் அவருக்கு சுகப்பிரசவம் நடத்துள்ளதாகவும் கூறினார்.
அந்த பெண் கர்ப்பமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை (WBC) இயல்பை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.
எனவே, கர்ப்ப காலத்தில் அவருக்கு சாதாரண புற்றுநோய் மருந்துகள் மற்றும் கீமோதெரபியை பரிந்துரைக்க முடியவில்லை.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அந்தப் பெண்ணின் உடல்நிலை மற்றும் அவரது வயிற்றில் உள்ள இரட்டைக் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுமித்ரா யாதவ் கூறுகையில், அந்த பெண்ணுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கூறப்படவில்லை. கர்ப்ப காலத்தில் அவரது மனநலம் முற்றிலும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்றார்.
சுகப்பிரசவத்தின் மூலம் அந்த பெண்ணுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் இரட்டை குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
இது பெண்ணின் முதல் கர்ப்பம் என்றும், இரட்டை குழந்தைகள் பிறந்தது அவரது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.