இந்தியா

முதலமைச்சர் அசோக் கெலாட் சிறையில் இருந்திருப்பார்: நீக்கப்பட்ட மந்திரி இவ்வாறு கூற காரணம்?

Published On 2023-07-24 01:38 GMT   |   Update On 2023-07-24 01:38 GMT
  • ராஜஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்ததால் மந்திரி பதவி பறிப்பு
  • ரெட் டைரி குறித்து தன்னிடம் அசோக் கெலாட் தெரிவித்தது குறித்து தகவல்

ராஜஸ்தான் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர் ராஜேந்திர குத்தா. மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அசோக் கெலாட் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.

இந்த நிலையில் நான் இல்லை என்றால், முதலமைச்சர் அசோக் கெலாட் சிறையில் இருந்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேந்தி குத்தா கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர ரதோருக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வரிமான வரித்துறை சோதனை நடத்தியபோது, முதலமைச்சர் அசோக் கெலாட், தன்னிடம் எந்தவொரு விலை கொடுத்தாவது 'ரெட் டைரி'யை மீட்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து என்னிடம் அந்த டைரி எரிக்கப்பட்டு விட்டதா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். குற்றம் ஏதும் இல்லை என்றால், அவர் அவ்வாறு தொடர்ந்து கேட்டிருக்கமாட்டார். நான் இல்லை என்றால் முதலமைச்சர் சிறையில் இருந்திருப்பார்.

இவ்வாறு தெரிவித்தார்.

அசோக் கெலாட் அரசின் மோசடி செயல்கள் குறித்த ரெட் டைரி குறித்து முக்கியமான தகவலை ராஜேந்திரா குத்தா குறிப்பிட்டுள்ளார். உண்மை தெரிந்தவர்கள் தற்போது இதற்கு பதில் சொல்வார்களா? என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பதவி நீக்கம் குறித்து ராஜேந்திர குத்தா கூறுகையில் ''என்னை ராஜினாமா செய்யும்படி நீங்கள் கேட்டிருந்தால், நான் செய்திருப்பேன். என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்'' என்றார்.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்ற ஆறு பேர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 2021 நவம்பர் மாதம் அதில் ஒருவரான ராஜேந்திர குத்தா மந்திரி சபையில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் பைலட்- கெலாட் இடையே மோதல் ஏற்பட்டபோது அசோக் கெலாட்டிற்கு ஆதரவு நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News