இந்தியா

இப்ப சொல்லி என்ன புண்ணியம்?: ஆர்.எஸ்.எஸ்சை சாடிய காங்கிரஸ்

Published On 2024-06-14 09:12 GMT   |   Update On 2024-06-14 09:53 GMT
  • அதிகாரம் மற்றும் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது.
  • இது பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க.வை விமர்சிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கனோட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ராமர் மீது பக்தி செய்தவர்கள் படிப்படியாக திமிர் பிடித்தனர். அந்தக் கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதிகாரம் மற்றும் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது என கூறியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சு பாராளுமன்ற தேர்தலில் 240 இடங்களைப் பிடித்தாலும் பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க.வை விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், தேர்தல் பிரசாரத்தில் கண்ணியமான தன்மை, பணிவு என்பது ஒரு சேவகர் அல்லது பொது ஊழியரின் சிறந்த பண்பு. ஆனால் அதை சிலர் செய்யவில்லை. ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்கக் கூடாது. மக்களை பற்றி நினைக்கவேண்டும் என கூறியிருந்தது, அவர் மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சிப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான பவன் கெரா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடி அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, நாம் ஏன்? பேசவேண்டிய நேரம் வரும்போது பேசியிருந்தால் எல்லோரும் அவரை சீரியசாக எடுத்திருப்பார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ்சும் அமைதி காத்தது. அவர்களும் அதிகாரத்தை அனுபவித்தனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News