தண்ணீருக்கான போராட்டம்.. தண்ணீரை கொண்டே கட்டுப்படுத்திய போலீஸ்.. வீடியோ
- டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
- டெல்லியில் நிகழும் தண்ணீர் தட்டுப்பாட்டு விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜ.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அம்மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், அரியானாவில் இருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இமாச்சல பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை தடுக்கக்கூடாது என அரியானா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இருப்பினும் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. பல்வேறு பகுதியில் குடிநீர் லாரிகள் மூலம் வாரத்தில் இரண்டு நாள், மூன்று நாள் என மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக அல்லல்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
#WATCH | Delhi: People in the Chilla Gaon of Mayur Vihar area fulfil their water requirements through water tankers amid water crisis in the national capital. pic.twitter.com/6UEnC8anbp
— ANI (@ANI) June 23, 2024
இதனிடையே, டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் நிகழும் தண்ணீர் தட்டுப்பாட்டு விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து பா.ஜ.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லியில் நேற்று பா.ஜ.க. தலைவர் ரமேஷ் பிதுரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகளை பயன்படுத்தினர். கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகளை பயன்படுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.