இது கேவலமான அரசியல்... மணீஷ் சிசோடியா கைதுக்கு கெஜ்ரிவால் கண்டனம்
- சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
- ஏழை குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா கடினமாக உழைத்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கைது நடிவடிக்கைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மணீஷ் அப்பாவி. அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கேவலமான அரசியல். சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளனர். நிச்சயம் இதற்கு பதிலளிப்பார்கள். இந்த நடவடிக்கை எங்கள் உத்வேகத்தை மேலும் அதிகரிக்கும். எங்கள் போராட்டம் வலுவடையும்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
'ஒவ்வொரு ஏழை வீட்டில் இருந்தும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா கடினமாக உழைத்துள்ளார். அவர் ஒரு நேர்மையான, ஒழுக்கமான மனிதர். ஆனால் இன்று அவரை கைது செய்துள்ளனர். நல்ல மனிதர்களையும் தேசபக்தர்களையும் கைது செய்கிறார்கள், அதே சமயம் அவர்களது நண்பர்கள் வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்' என கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறினார்.