எர்ணாகுளம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- தொழிலாளி பலி
- பட்டாசு ஆலை அருகே குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
- விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு உரிய லைசென்ஸ் இல்லை என்பது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
எர்ணாகுளத்தை அடுத்த வரபுழா பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் நேற்று தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை திடீரென இந்த ஆலையில் இருந்து கரும்புகை ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் ஆலையின் பட்டாசு தயாரிக்கும் பகுதியில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இதில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது பட்டாசு ஆலை அருகே குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
இதற்கிடையே வெடிவிபத்து நடந்த இடத்தில் மலையாள திரைப்பட நடிகர் தர்மஜனும் இருந்துள்ளார். ஆலை வெடித்து சிதறியபோது அவர் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக தெரிவித்தார்.
விபத்து பற்றி தெரியவந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இதில் விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு உரிய லைசென்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.