இந்தியா

அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு: அரியானா அரசு

Published On 2024-07-17 11:14 GMT   |   Update On 2024-07-17 11:17 GMT
  • 23 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 4 வருடம் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.
  • அதன்பின் 25 சதவீதம் பேர் 15 ஆண்டு பணிகள் நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சண்டிகர்:

அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 4 ஆண்டு பணிபுரிந்தபின் வெளியேறிவிடுவார்கள். அதன்பின் 15 ஆண்டுக்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

இதற்கிடையே, அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதால் அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர் கிடைக்காது எனக் கூறினர். ஆனால், மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.

ஒருவேளை பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அக்னிவீர்களுக்கு மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக் காவலர், ஜெயில் வார்டன் மற்றும் எஸ்பிஓ போன்ற பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் என அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அக்டோபரில் அரியானா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே, அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னிவீர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையின் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News