அமலாக்கத்துறை வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கேட்ட ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி
- விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
- 2 சம்மன்களில் மட்டுமே ஹேமந்த் சோரன் ஆஜரானார்.
ராஞ்சி:
ஜார்க்கண்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.
இதற்கிடையே கடந்த முறை ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக இருந்த கால கட்டத்தில் ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தை பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 10 முறை சம்மன்கள் அனுப்பியது. இதில் 2 சம்மன்களில் மட்டுமே அவர் ஆஜரானார். மற்ற சம்மன்களை அவர் ஏற்கவில்லை.
இது தொடர்பாக அவர் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நேற்று ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது. அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அடுத்த விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.