மணிப்பூர் விவகாரம் குறித்து அமித் ஷா பேசுவார்: மத்திய மந்திரி தகவல்
- பிரதமர் மோடி பதில் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விரிவான அறிக்கையை இரு அவைகளிலும் சமர்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் என மத்திய மந்திரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
என்றாலும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் 4-வது நாளாக அவைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ''மணிப்பூர் விவகாரம் குறித்து அமித் ஷா பேச இருக்கிறார். அதேபோல் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம்'' என்றார்.
இதற்கிடையே மக்களவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பிரதமர் மோடி மக்களவையில் பேசியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பேசவைக்க எதிர்க்கட்சிகள் இந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தால், அதன்பின் ஆறு மாதங்களுக்கு இதுபோன்று தீர்மானம் கொண்டு வர முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள போதுமான எம்.பி.க்கள் எண்ணிக்கை பா.ஜனதாவிடம் உள்ளது.